சுந்தர் சி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம்' தயாராகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

'முகவரி', 'தொட்டி ஜெயா', 'நேபாளி', '6', 'ஏமாளி', 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் வி இசட் துரை இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'தலைநகரம் 2'. இந்தப் படத்தில் சுந்தர் சி கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகை அனுபமா பரமேஸ்வரன், நடிகர் தம்பி இராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வசனத்தை மணிஜி எழுத , ஒளிப்பதிவை கிருஷ்ணசாமி மேற்கொள்கிறார்.

இப்படத்தின் மூலம் இயக்குனர் வி இசட் துரை தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார். அவர் தன்னுடைய நண்பரான எஸ் எம் பிரபாகரனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று எளிமையாக நடைபெற்றது.

படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும், படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

'தலைநகரம்' படத்தின் முதல் பாகத்தில் வடிவேலு 'நாய் சேகர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார் என்பதும், இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.