ஜி. எம். ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன்ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். 

இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஒக்டோபர் 1ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜேஎஸ்கே கோபி, படத்தொகுப்பாளர் வேல்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

படத்தின் இயக்குனர் மோகன்ஜி பேசுகையில்,'' திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். திரௌபதி படத்தை பார்த்துவிட்டு, ‘உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விடயத்தை சொல்கிறேன். 

அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என  கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் எம்மிடம் ஒரு விடயத்தைச பகிர்ந்து கொண்டார். 

கிறிஸ்தவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது. கிறிஸ்தவ மதத்தை சிலர் கொர்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார். மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். 

இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் எனவும் விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு மதமாற்றம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.

சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கொர்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார்.

இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எமக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்துவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்துவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ‘ருத்ரதாண்டவம்’ உருவான கதை.

டத்தோ ராதாரவி அவர்களை சந்தித்து கதையை சொல்ல வேண்டும் என்றபோது எனக்குள் நிறைய தயக்கம் இருந்தது. நண்பர் ஜேஎஸ்கே கோபி அவர்களின் உதவியுடன் டத்தோ ராதாரவியை சந்தித்து கதையைக் கூறினேன். அப்போது அவர் ஒரு திருத்தத்தை சொன்னார் அதை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இப்படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். 

அவர் சொன்ன திருத்தத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு எமக்கு திரைஉலக பக்குவம் இல்லாததால், சிறிது கால அவகாசம் கேட்டுவிட்டு பிறகு, அவர் கேட்ட விடயத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதற்கு சம்மதம் தெரிவித்தேன். அது என்னவெனில் இந்தப்படத்தில் அவர் நீதிமன்றத்தில் பேசும்பொழுது ‘நான் ஒரு பட்டியலின வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர் என்பதை பெருமிதமாக நினைக்கிறேன்’ என்பார் 

கதாநாயகி தர்ஷா குப்தா இந்த படத்தில் அவருடைய நடிப்பிற்கு அவரே பின்னணி குரல் கொடுத்தார். இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் கருதுவேன். ஏனெனில் நான் இயக்கிய மூன்று படங்களிலும் நாயகிகள் சொந்த குரலில் பின்னணி பேசியிருக்கிறார்கள். இதனால் தமிழ் பேசத் தெரிந்த நடிகர்களை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஊக்கமாக இருக்கிறது. தர்ஷா குப்தா படத்தில் 8 மாத கர்ப்பிணியாக கதையில் அறிமுகமாகி, ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். படம் வெளியான பிறகு நிச்சயம் அவர் பேசப்படுவார் .

நடிகர் மனோபாலா சார் அதிரடியாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். விரைவில் ஸ்னீக் பீக்காக வெளியாகவிருக்கிறது. அந்த முன்னோட்ட காட்சிகள் வெளியான பிறகு நிச்சயம் சலசலப்பு உண்டாகும். இதற்கு எதிர்மறையாக விமர்சனங்கள் வரும். இதற்கு நான் இப்போதே பதிலளித்து விடுகிறேன். படத்தில் அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் தவறு என்றால், நிஜத்தில் தலைவர் ஒருவர் மேடையில் பேசிய அத்தகைய பேச்சும் தவறுதான். தலைவர் ஒருவர் மேடையில் பேசிய பேச்சை தான் இப்படத்தில் வசனங்களாக இடம்பெற வைத்திருக்கிறேன். இந்த சலசலப்பு படத்தின் வெளியீட்டிற்கு வெற்றிக்கும் பெரிய அளவில் உதவி செய்யும் என நம்புகிறேன்.

அதேபோல் மற்றவர்களுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன் நீங்கள் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய மதத்தை பற்றியோ.. என்னுடைய சமூகத்தைப் பற்றியோ.. ஏதேனும் காயப்படுத்தும் வகையில் பேசினால், அதனை அப்படியே என்னுடைய படைப்பில் இடம்பெறும் கதாபாத்திரம் பேசும் வகையில் வைத்து விடுவேன். அதனால் மற்றவர்களை காயப்படுத்தும் முன் தீர யோசனை செய்து வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படம் யார் மனதையும் காயப் படுத்துவதற்காக எடுக்கப்படவில்லை. ஒரு படைப்பாளியாக எனக்கு கிடைத்த ஒரு நல்ல கருவை அனைவரும் ரசிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.' என்றார்.