அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் தற்போதைய போராட்டம் குறித்து அனேகருக்கு தெளிவில்லாத தன்மை காணப்படுகிறது. விடயம் தொடர்பில் அறிந்திராத பலர் வைத்தியர்களின் போராட்டம் நியாயமானது என்று வாதிடுகிறார்கள்.

தங்களுடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதி வேண்டும் என்பதே அவர்களுடைய முதல் வாதம். 

அதாவது வைத்தியர்களுக்கு கிடைக்கும் இடமாற்றத்தினால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் இதனால் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதி வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இடமாற்றங்களின்போது ஏற்படும் சிக்கல்களுக்கு ஏற்கனவே தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதுவும் வைத்தியர்களுக்கு விசேட சலுகை எப்போதும் உண்டு.

எனினும் வைத்தியர்களுடைய தற்போதைய கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.

ஆரம்பத்தில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் போராட்டம் நடத்தினார்கள். பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிக்கொண்டு அரச பணியை மாத்திரம் புறக்கணித்து போராட்டத்தில் வெற்றியும் கண்டார்கள்.

அதற்குப் பிறகு வாகன இறக்குமதியில் சலுகை கேட்டார்கள். அதற்காக தொடர்ச்சியான போராட்டம் நடத்தினார்கள். அப்போதும் தனியார் வைத்தியசாலைகளில் பணியாற்றிக்கொண்டு அரச பணியை புறக்கணித்தார்கள். அந்தப் போராட்டமும் வெற்றியடைந்தது.

இரண்டு பிரதான கோரிக்கைகளை வென்றெடுத்ததினூடாக அரசாங்கத்தை ஆட்டிப்படைத்துவிடலாம் என்பதே வைத்தியர்களுடைய எண்ணமாக மாறியது.

அதற்காக மக்களின் வாழ்க்கையை துரும்பாக பயன்படுத்தி தற்போது மற்றுமொரு போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

சாதாரண ஏழை பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை வேண்டும் எனக் கோரியிருந்தாலும் அதில் ஒரு சமூக அக்கறை இருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் இங்கு முழுக்க முழுக்க சுயநலனை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சை முற்றுகையிடுவதிலும் அரசாங்கத்துக்கு எதிராக அறிக்கை விடுவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

நாடுமுழுவதிலும் அவர்கள் இனங்கண்டுள்ளதாக கூறப்படும் 12 பாடசாலைகளில் மாத்திரம்தான் தங்களுடைய பிள்ளைகளுக்கு அனுமதி வேண்டும் என்பதே அவர்களுடைய கோரிக்கை.

உதாரணத்துக்கு ஒன்றை இங்கே குறிப்பிடலாம்.

வைத்திய சங்கத்தினருக்கு கொழும்பு ரோயல் கல்லூரி அனுமதி வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி அனுமதி அவர்களுக்கு வேண்டாம் என்கிறார்கள்.

இது எந்த வகையிலான கோரிக்கை என்பது புரியவில்லை.

இதில் எங்கு நியாயத்தை தேடுவது என்பதும் தெரியவில்லை.

அரச வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் நேர முகாமைத்துவத்தை கண்காணிக்க கைவிரல் பதியும் முறையை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு ஏற்கனவே தீர்மானித்தது.

அதற்கு எந்தளவான போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை முழு நாட்டு மக்களும் அறிவார்கள்.

குறிப்பாக வைத்தியர்கள் பலர் தனியார் வைத்தியசாலைகளில் அதிக நேரத்தை அக்கறையுடன் செலவிடுவதால் அரச வைத்தியசாலைகளுக்கு தாமதமாகவே வருகை தருகின்றனர்.

எங்கே வைத்தியர்களை எதிர்த்தால் தமது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என எண்ணி நோயாளர்களும் அவர்களுக்கு எதிராக செயற்படுவதில்லை. அதேபோன்று அரசாங்கமும் சற்று விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் தான் இதுவரை காலமும் செயற்பட்டு வந்தது.

எனினும் தற்போதைய நிலை என்ன?

வைத்தியர்களின் தற்போதைய போராட்டம் குறித்தான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

அனைத்து தொழிற்சங்கங்களையும் சமமாகவே பார்ப்பதாகவும் தொழில் ரீதியான பிணக்குகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நாட்டு மக்களின் நலனுக்காக தீர்த்து வைக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

வைத்தியர்களின் சங்கத்தைப் பற்றி நேரடியாக இங்கு குறிப்பிடப்படாவிட்டாலும் இதன் உள்ளர்த்தம் என்னவென்பது வெளிப்படையாகிறது.

அதேபோல் அனைத்து மாணவர்களையும் அரசாங்கம் சமமாகவே பார்ப்பதாகவும் பாகுபாட்டுக்கு இடமில்லை எனவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்தினை அமைச்சர் வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார்.

உண்மையில் இந்தப் போராட்டத்தினூடாக வைத்தியர்களுடைய சுயநலத்தின் உச்சகட்டம் புலப்படுகிறது என்பதே உண்மை.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தை மேற்கொள்ளப்போகிறது என்பதை இங்கு கண்ணும் கருத்துமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

அத்துடன் இதில் அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானத்தை ஏனைய பிரதான தொழிற்சங்கங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.

எது எவ்வாறாயினும் சாதாரண பொதுமக்களே பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். பணிப்புறக்கணிப்பு காலத்தில் அரசாங்கத் தொழிலை மறுக்கும் அரசாங்க வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் அதிக நேரத்தை செலவிடுகின்றமை கண்கூடு.

எனினும் இவ்வாறான விடயம் குறித்து பொதுமக்கள் அதிகமாக விழிப்புணர்வூட்டப்பட வேண்டிய தேவை உள்ளது. பொதுமக்களின் எழுச்சி மிக்க போராட்டங்களின் ஊடாகவே எழுந்தமானமாகவும் எதேச்சதிகாரத்துடனும் செயற்படுவோருக்கு நல்ல பாடம் கற்பிக்க முடியும்.

-இராமானுஜம் நிர்ஷன்-