புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் பேச்சுவார்த்தை : கோத்தாபயவின் அறிவிப்பு குறித்து தமிழர்கள் மத்தியில் ஐயுறவு

By T Yuwaraj

23 Sep, 2021 | 10:18 PM
image

மீரா ஸ்ரீனிவாசன் 

இலங்கையில் போர்க்கால பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தை அழைக்கப்போவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அண்மையில் நியூயோர்க்கில் வெளியிட்ட அறிவிப்பு  தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை விடவும் ஐயுறவு மனப்பான்மையையே ஏற்படுத்தியிருக்கிறது.

239877810 4327470237366476 1530223819238432972 n

ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுடன் நடத்திய சந்திப்பின்போது ஜனாதிபதி கோத்தாபய இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகள் உள்நாட்டு பொறிமுறைகள் மூலமாகவே தீர்க்கப்படவேண்டும் என்று கூறினார். 

இது விடயத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் கூறியதாக ஜனாதிபதி செயலக ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள பல  அமைப்புக்களின் உறுப்பினர்களை  பயங்கரவாதிகள் என்று கூறி ஆறு மாதங்களுக்கு முன்னர் தடைசெய்த அரசாங்கத்தின் ஜனாதிபதியிடமிருந்து வந்ததால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

  ராஜபக்ஷ நிருவாகம்  புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள குழுக்களை " புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள்" என்று  திரும்பத்திரும்ப குறிப்பிட்டதுடன் அவை புலிகளின் பிரிவினைவாத போராட்த்தை மீள்விக்க முயற்சிக்கின்றன என்று குற்றஞ்சாட்டியும் வருகிறது.

வரவேற்கக்கூடிய  சமிக்ஞை

 " ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவிரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நகர்வு. நாம் அதை வரவேற்கிறோம்.என்று உலக தமிழர் அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் கூறினார். இந்த அமைப்பு வட அமெரிக்கா,ஐரோப்பா,ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவில் உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

" இலங்கையில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தங்களுடன்  பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ராஜபக்சவிடம் வேண்டுகோள் விடுக்கும்போதெல்லாம் அற்ப காரணங்களைக் கூறி  அதை தட்டிக்கழிக்கும் ஜனாதிபதி இப்போது புலம்பெயர் தமிழ்ச்சமூகமாகிய எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக நியூயோர்க்கில் இருந்து அறிவித்திருக்கிறார்" என்று சுரேந்திரன் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார்.உலக தமிழர் அமைப்பு உட்பட புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்த சில மாதங்களில் ஜனாதிபதியிடம் காணப்படும் திடீர்  மனமாற்றத்தை சுரேந்திரன் சந்தேகிக்கிறார்.

ஜனாதிபதி கோத்தாபய  கடந்த ஜூன் மாதம் போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மிகப்பெரிக கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

அந்த சந்திப்பு பற்றிய அறிவிப்பு கவனத்தை பெரிதும் ஈர்த்தது.ஏனென்றால், 88 வயதான மூத்த தமிழ் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்புடன் கோதாபய முதன்முதலாக நடத்தவிருந்த சந்திப்பாக அது அமையவிருந்தது.கணிசமான அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மூலமாக தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டும் என்று சம்பந்தன் கோரிக்கை விடுத்து வருகின்றார்.ஆனால் அந்த சந்திப்பு பிற்போடப்பட்டது.பேச்சுவார்த்தை நடத்தப்படக்கூடிய  அடுத்த திகதி பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

அதேவேளை, புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துடன் பேச்சு நடத்தத்தயாராக இருப்பதாக ஜனாதிபதி விடுத்த அறிவிப்பில் நம்பிக்கை வைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பது அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

நியூயோர்க்கில் ஜனாதிபதி கோத்தாபய அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை  " திசைதிருப்பும் தந்திரோபாயம் " என்று வர்ணிக்கும்  மூத்த பத்திரிகையாளரும் அரசியல் அவதானியுமான  வீரகத்தி தனபாலசிங்கம் இலங்கைத் தழிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டும் என்ற கோரிக்கையை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள அமைப்புகள் உறுதியாக ஆதிரித்து குரல்கொடுத்து வந்தாலும், அவர்கள் ஒரு கட்டுறுதியான அரசியல் சக்தியாக இல்லை என்று கூறுகிறார்."

 அவர்களை இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக கருதவும் முடியாது.இலங்கையில் இருந்து வெளியேறிய அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வேறு நாடுகளில் குடியுரிமைமைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள் " என்று அவர் " த இந்து " வுக்கு கூறினார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்காக புலம்பெயர் தமிழர்களை நம்பியிருக்கிறார்கள்.ஆனால், பல புலம்பெயர் அமைப்புகள் தீவிரவாத நிலைப்பாடுகளைக் கொண்டவயாக இருக்கின்றன. நாட்டில் உள்ள மிதவாத தமிழ் அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தயங்குகின்ற ஜனாதிபதி புலம்பெயர் தமிழ்ச் சக்திகளுடன் எதைப் பேசப்போகிறார்? வெளிநாட்டு முதலீடுகளைப் போன்ற விடயங்கள்  பற்றி அவர்களுடன் ஜனாதிபதி  பேசலாம்.

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத்தீர்வொன்றைக் காண்பதற்கு சரவதேச சமூகத்தின் ஆதரவை திரட்டுவதற்கு பலம்பெயர் தமிழ்ச்சமூகம் உதவி செய்யலாம்.ஆனால், அரசியல் தீர்வொன்றை காணும் முயற்சிகளில் முன்னணிச் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் ஒருபோதும் இருக்கமுடியாது. உள்நாட்டில் காணவேண்டிய தீர்வுக்கு உள்நாட்டுப் பொறிமுறையே அவசியம் என்று கூறுகின்ற ஜனாதிபதி ராஜபக்ச புலம்பெயர் தமிழ்ச்சமூகத்துடன் பேச விரும்புகிறார்.

இனப்பிரச்சினை என்று வருமபோது ஜனாதிபதி தமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகளுடனேயே  முதலில் பேசவேண்டும். அதேவேளை,தமிழ்ப் பிரதிநிதிகளும் கூட ஒருமித்த அணுகுமுறையுடன் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அணுகமுடியாதவர்களாக இருக்கிறார்கள். இது தமிழ் மக்களின் துரதிர்ஷடமாகும் என்று தனபாலசிங்கம் கூறினார்.

( த இந்து, 23 செப்.2021)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்