(இராஜதுரை ஹஷான்)

எல்லை மீறிய அரசியல் அழுத்தம் காரணமாகவே அரச நிறுவனங்களின் பிரதானிகளும், உயர்மட்ட அதிகாரிகளும் பதவியை இராஜினாமா செய்கிறார்கள். கடந்த 17 மாத காலத்தில் மாத்திரம்  16  அரச நிறுவன அதிகாரிகள் பதவி விலகியுள்ளனர். 

நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய  நுகர்வோர் அதிகாரசபை இன்று வியாபாரிகளின் நலனுக்காக மாத்திரம்  செயற்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.

 மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அறிவியல் துறையையும் அரசியல் அழுத்தம் விட்டு வைக்கவில்லை. கொவிட் -19 வைரஸ் தொடர்பான தொழினுட்ப குழுவில் இருந்து பலர் பதவி விலகியுள்ளார்கள். சுகாதார தரப்பினரது ஆலோசனைகளை அரசியல் ஆலோசனைகள் புறக்கணிப்பதால் அவர்கள் பதவி விலகியுள்ளார்கள்.

ராஜபக்ஷர்களின் நிர்வாகத்தில் மனசாட்சியுடன் செயற்படுபவர்களுக்கு ஒருபோதும் சுயாதீனமாக சேவையாற்ற முடியாது. நிறைவடைந்த 17 மாத காலத்திற்குள் 16 அரச உயர்மட்ட அதிகாரிகள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்துள்ளார்கள்.

இரண்டு பிரதான அமைச்சர்களின் அரசியல் அழுத்தங்களினாலும், அரசியல் தலையீட்டினாலும் தான் நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்று பணிப்பாளர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக  துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார். 

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பிலும், சதொச நிறுவனத்தின் ஊடாக இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் வெள்ளைபூண்டு மோசடி விவகாரத்திற்கும் இவர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் நிறைவேற்று பணிப்பாளர் பதவில் இருந்து பதவி விலக நேரிட்டுள்ளது.

வெள்ளை பூண்டு மோசடியினால் அரசாங்கத்திற்கு 175 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. அதே போல் உழுந்து மோசடியால்  அரசாங்கத்திற்கு 94 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின விலையேற்றத்திற்கு வியாபாரிகள் தற்போது புதிய தந்திரமான செயற்பாட்டை கையாள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி சந்தையில் அப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டவுடன், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு பொருட்களின்விலையை அதிகரித்துக் கொள்கிறார்கள். பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டவுடன்  பதுக்கப்பட்ட பொருட்கள் தாராளமாக சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன.

மக்களின் உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய  நுகர்வோர் அதிகார சபை இன்று முழுமயாக அரசியல்வாதிகளின்  வழிநடத்தலுடன் வியாபாரிகள் பக்கமிருந்து செயற்படுகிறது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க எவரும் தற்போது இல்லை. ராஜபக்ஷர்களின் நிர்வாகத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவது எதிர்பார்க்கப்பட்டதே என்றார்.