நடிகரான ஜெய் 'சிவசிவா' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இவருக்கு மூத்த இசை அமைப்பாளர் மற்றும் தேனிசைத் தென்றல் தேவா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

விஜய் நடித்த 'பகவதி' படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமானவர் ஜெய்.

 'சென்னை 28' , 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி', 'கலகலப்பு' உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். 

இசை அமைப்பாளர் தேவா அவர்களின் உறவினரான இவர் பால்ய பராயத்திலேயே இசைத் துறையில் பயிற்சி பெற்றவர். 

இசை அமைப்பாளராக வரவேண்டும் என்பது இவருடைய தொடக்க கால கனவாகவும் இருந்தது. 

ஆனால் நடிகராக அறிமுகமாகி புகழ் பெற்ற இவர், 19 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய கனவை நனவாக்கி இருக்கிறார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகிவரும் 'சிவசிவா' என்ற படத்தில் நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிப்பதுடன், இசை அமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். 

இந்தப் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

வைரமுத்து எழுதி, பாடகர் அனல் ஆகாஷ் பாடிய 'காட முட்ட..' என தொடங்கும் பாடல், லிரிகல் வீடியோவாக இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ஜெய் இசையில் வெளியான இந்த முதல் பாடல் இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கிறது.

நடிகராகவும், பாடகராகவும் வெற்றி பெற்ற ஜெய், 'சிவ சிவா' படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.