வெளிப்புறப் பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெங்சங்கரிடம்  பீரிஸ் தெரிவிப்பு

By Digital Desk 2

24 Sep, 2021 | 06:59 AM
image

எம்.மனோசித்ரா

வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளினதும் நலன் கருதி இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமானதும் நீதியானதுமான தீர்வுகள் அவசியம் என்பதை இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நேற்று புதன்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போதே இரு நாட்டு அமைச்சர்களாலும் மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

இந்த சந்திப்பின் போது கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனையும் இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

2009 மே மாதத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்கு விளக்கினார். பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதன் போது வலியுறுத்தினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right