இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'தல' அஜித் நடிப்பில் தயாராகி வரும் 'வலிமை' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து அதன் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'வலிமை'. 

இதில் 'தல' அஜித் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக முன்னணி பொலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார். 

இவர்களுடன் தெலுங்கின் முன்னணி நடிகரான கார்த்திகேயா, யோகி பாபு, பவெல் நவகீதன் சங்கீதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு வெளிநாடுகளுக்குச் சென்று படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை அண்மையில் நிறைவு செய்த படக்குழுவினர், படத்தின் வெளியீட்டு திகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், 'வலிமை' அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு பட மாளிகையில் வெளியாகும்' என ட்விட்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 'தல' அஜித்தின் 'வலிமை' பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டிருப்பதால், 'தல' அஜித்தின் இரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.