(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

காணாமல் போனவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மரண சான்றிதழ் கொடுப்பதானால் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்போகின்றார் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சரணடைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமென ஐ.நா. சாசனத்தில் உள்ள நிலையில்  ஐக்கி நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச ஐ.நா. செயலரிடமே இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்  கொடுக்கப் போவதாக கூறுகின்றார். அவ்வாறானால் இலங்கையில் கண்  கண்ட சாட்சியங்களுடன் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் ,சரணடைந்தவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்டனர் என்றே  ஜனாதிபதி கூறுகின்றார்.

இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்  கொடுக்கப் போவதாக கூறும் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ், அந்த காணாமல் போனவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்  போகின்றார்? காணாமல் போனவர்களுக்கு  ஜனாதிபதி மரண சான்றிதழ் கொடுப்பதானால் அதற்கு   காரணமானவர்களுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டுமென இந்த சபையில் கோருகின்றேன்.

இலங்கை  இராணுவத்திடம் கண் கண்ட சாட்சியங்களுடன் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு மரண சான்றிதழ் கொடுப்பேன் என இந்த நாட்டின் ஜனாதிபதி ஐ,நா.வுக்கு போய் கூறுகின்றார் என்றால், தமிழ் மக்களின் உயிர்களை அவர் எவ்வளவு தூரம், துச்சமாக  பார்க்கின்றார் என்பதனை புரிந்து கொள்ள முடியும் .

அத்துடன் அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அதேபோன்று அந்த கைதிகளை யாழ்ப்பாணத்துக்கு இடமாற்ற முடியுமானால் அதனை செய்வதாக தெரிவித்தமை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.