(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் உள்ளகப்பிரச்சினைகளை தீர்க்க சர்வதேச புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நாம் வரவேற்கின்றோம், ஆனால் முதலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய எம்முடன் முதலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். பொறுப்புக்கூறல் விடயங்களை கையாள்வது அரசாங்கம் இரட்டை நாடகமாடுகின்றது எனவும் அவர் கூறினார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால்  இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள வாய்மூல அறிக்கையில் உள்ளடக்க விடயங்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் இரட்டை நாடகமாடுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச்செயலாளரை சந்தித்த ஜனாதிபதி கூறிய விடயங்களை கவனித்தால், உள்ளக செயற்பாடுகளில் ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட கடமைப்பட்டுள்ளோம். பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்த இணைந்து செயற்படுவோம். அதாவது பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து கடமையாற்றுவோம் என ஜனாதிபதி  கூறியுள்ளார்.

பிரச்சினைகளை தீர்க்க நாம் தயாராக உள்ளோம். நல்லிணக்கம் மற்றும் நீதியை நிலைநாட்ட தயாராக உள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை நாம் உடனடியாக வரவேற்றோம். 

அரசாங்கம் இந்த விடயங்களில் ஆரோக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் அதனை நாம் வெளிப்படையாக வரவேற்கின்றோம். இவ்வாறு ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இட்ட  பதிவிற்கு நாமும் உடனடியாக பதில் தெரிவித்தோம்.

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை மேம்படுத்த ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கின்றோம். இந்த நகர்வுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் வரையில் நாம் காத்துக்கொண்டுள்ளோம் என தெரிவித்தோம்.

ஏனென்றால் நாம் எப்போதுமே இந்த விடயத்தில் காத்துக்கொண்டிருக்க மட்டுமே முடியும். எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பது எமக்கு நன்றாகத் தெரியும். கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பாங்கீன்- மூனுடன்  கூட்டு அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார். அதில் கண்டிப்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வாக்குறுதியளித்தார். 12 ஆண்டுகளின் பின்னர் அவரது தம்பி கோட்டாபய ராஜபக்ஷாவும் அதே விடயங்களை கூறியுள்ளார்.

ஆனால் வெளிவிவகார அமைச்சு இதனை நிராகரித்துள்ளது. வெளியக பொறிமுறை எதற்கும் நாம் இணக்கம் தெரிவிக்க மாட்டோம் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்தவொரு உடன்படிக்கையையும் நாம் ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம் என கூறியுள்ளனர். ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் இரட்டை நாடகம் ஆடுகின்றது.

அதேபோல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார், அதனை நாம் வரவேற்கின்றோம். எனினும் ஜூலை 16ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இறுதி நேரத்தில் அந்த பேச்சுவார்த்தை இரத்தானது. விரைவில் மீண்டும் எம்முடன் பேசுவோம் என இரண்டு கடிதங்கள் மூலம் அறிவித்திருந்தார். இரண்டு மாதங்களாக  நாமும் காத்துக்கொண்டுள்ளோம்.

ஆனால் நியுயோர்க்கில் சென்று புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேசுவதாக கூறுகின்றார். அதனை வரவேற்கின்றோம், ஆனால் இந்த பிரச்சினைகளை தீர்க்க முதலில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகிய எம்முடன் இங்கு பேச வேண்டும் எனவும் அவர் கூறினார் .