(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

அடிப்படைவாத தாக்குதல்தாரிகளுக்கு சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரரின் கருத்தை கண்டிக்கிறேன். முஸ்லிம் உறுப்பினர்கள் இதுதொடர்பில் ஏன் மெளனமாக இருக்கின்றார்கள் என கேட்கின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இ.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்

சீனாவின் ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட சிங்கள சமூகமொன்று உருவாகும் - எதிர்வு  கூறுகிறார் சாணக்கியன் | Virakesari.lk

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தற்போது ஞானசார தேரர் கடும் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றார். அவரது கருத்துக்களும் அவ்வாறே உள்ளது. நாங்கள் இனவாதமாக செயற்படும் மத தலைவர்களுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிடுகின்றோம். 

இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும், ஜனாதிபதியை பதவிக்கு கொண்டுவருவதற்காக சுமார் 800 முறை மத வழிபாடுகளில் ஈடுபட்டதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடிப்படைவாத தாக்குதல்தாரிகளின் சூத்திரதாரி அல்லாஹ்தானென ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்றார். அவரின் கருத்தை கண்டிக்கிறேன்.

இந்த கருத்து தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள் மௌனம் காப்பதேன்? எந்த நேரத்திலும் இலங்கையில் தாக்குதல் நடக்கலாமென ஞானசார தேரர் கூறுகிறார். அப்படியானால் முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள்?

பாராளுமன்றத்தில் முக்கிய சட்ட மூலங்களையும், திருத்தங்களையும் செய்வதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் உதவி தேவை. ஏனைய நேரங்களில் அவர்கள் அனைவரும் கெட்டவர்களா? என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

ஜனாதிபதி வெளிநாட்டிற்கு சென்று முஸ்லிம் முதலீட்டார்களுக்கு அழைப்பு விடுகின்றார். ஆனால் நாட்டில் வேறு விதமாகவே இடம்பெறுகின்றது.

ரிசாட், அசாத் சாலி பேசினால் இனவாதம், ஆனால் ஞானசாரர் பேசினால் அது இனவாதம் இல்லையா? நான் இங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இங்கு கூச்சலிடும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் தனது தொகுதிக்கு வந்தால், அவரை போன்றவர்களை மக்கள் அடித்து விரட்ட வேண்டும். என்றார்.