(எம்.மனோசித்ரா)

கல்வி செயற்பாடுகள் முடங்கியுள்ளமையால் மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறு சகல தொழிற்சங்கங்களிடடும் கோரிக்கை விடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதிபர் - ஆசிரியர் சங்கங்களுடன் நிதி அமைச்சரும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இன்னமும் உயர் தர கல்வியை ஆரம்பிக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

அதேபோன்று கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கும் சிறந்த பாடசாலைகளுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன. சாதாரண தர பரீட்சை பெறுபேருகளையும் வெளியிட முடியாமலுள்ளது.

முரண்பாடுகள் காணப்படுகின்றமையை ஏற்றுக் கொள்கின்றோம். அதனை தீர்ப்பதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. 

அந்த தீர்மானங்கள் போதுமானவையல்ல என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எனினும் இதனால் மாணவர்கள் எதிர்கொள்ளக் கூடிய பாதிப்புக்களைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு சகல தொழிற்சங்கங்களிடமும் கோரிக்கை விடுகின்றோம் என்றார்.