(எம்.மனோசித்ரா)

நாட்டில் சில அத்தியாவசியப் பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எதிர்வரும் 3 மாத காலங்களுக்குள் நிலைமையை சமநிலைப்படுத்தி பொருளாதார ரீதியில் சாதகமான சூழல் கட்டியெழுப்பப்படும் என்று நம்புவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர்,

அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் அமைச்சரவையில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. உலக பொருளாதார நெருக்கடி மற்றும் தொற்று பரவல் நெருக்கடி என்பவற்றுக்கிடையில் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.

சுற்றுலாத்துறை முழுமையாக முடங்கியமையால் இந்த இரு ஆண்டுகளிலும் சுமார் 7 பில்லியன் டொலருக்கும் அதிக வருமானம் அற்றுப் போயுள்ளது. இதன் மூலம் தோற்றம் பெற்ற டொலர் இருப்பு பிரச்சினையும் நாட்டில் காணப்படுகிறது. 

எவ்வாறிருப்பினும் இவ்வாறான நிலைமைகளுக்கு மத்தியிலும் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் சில பொருட்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

எவ்வாறிருப்பினும் அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக எதிர்வரும் 3 மாத காலங்களுக்குள் நிலைமையை சமநிலைப்படுத்தி பொருளாதார ரீதியில் சாதகமான சூழல் கட்டியெழுப்பப்படும் என்று நம்புகின்றோம் என்றார்.