(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை கட்டார், தோஹா நகரில் நடைபெறவுள்ள 25 ஆவது ஆசிய மேசைப்பந்தாட்ட வல்லவர் போட்டியில் பங்கேற்கவுள்ள 9 பேரைக் கொண்ட இலங்கை குழாத்தினர் எதிர்வரும் 24 ஆம் திகதியன்று இலங்கையிலிருந்து கட்டார் நோக்கி புறப்படவுள்ளனர். 

இந்த 9 பேர் கொண்ட சமீர கினிகே, செனுர டி சில்வா, மிலிந்த லக்சித்த, ஹிமேஷ் ரன்ச்சாகொட, இமன்த்த உதங்ஜய, இஷாரா மதுரங்கி, பிமந்தி பண்டார, பிரியதர்ஷனி முத்துமாலி, தனுஷி ரொட்ரிகோ ஆகியோர் அடங்குகின்றனர்.

 

இதன் ஆண்கள் குழுவுக்கு சமீர கினிகே அணித் தலைவராக செயற்படவுள்ளதுடன், பெண்கள் குழுவின் அணி தலைவியாக இஷாரா மதுரங்கி நியமிக்கப்பட்டுள்ளார்.

டொரிங்டனிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில்  கடந்த 8 ஆம் திகதி முதல் 'பயோ பபிள்'  சுகாதார விதிமுறைகளுக்காக இலங்கை குழாத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சமீர மற்றும் இஷாரா இருவரும் தெற்காசிய மேசைப்பந்தாட்ட வல்லவர் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பல தடவைகள் வென்றுள்ளனர். 

மேலும், செனுர , பிமந்தி ஆகியோரும் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.  எனினும், ஆசிய மேசைப்பந்தாட்ட வல்லவர் போட்டியில் இலங்கை இதுவரை எந்த விதமான பதக்கத்தையும்  வென்றதில்லை.

மேசைப்பந்தாட்ட விளையாட்டில் கொடி கட்டிப் பறக்கும் சீனா, ஜப்பான், வட கொரியா, தென் கொரியா, ஹொங்கொங், சீன தாய்ப்பே, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 47 நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கிறது.  

1972 முதல் 2019 வரையான 24 அத்தியாயங்களைக் கொண்ட ஆசிய மேசைப்பந்தாட்ட வல்லவர் போட்டி வரலாற்றில் 128 தங்கம், 79 வெள்ளி, 105 வெண்கலம் என மொத்தமாக 312 பதக்கங்களை வென்றுள்ளது சீனா. 

சீனாவுக்கு அடுத்தப்படியாக உள்ள ஜப்பான் 14 தங்கம், 24 வெள்ளி, 64 வெண்கலம் என மொத்தமாக 102 பதக்கங்களையும், தென் கொரியா 11 தங்கம், 23 வெள்ளி, 47 வெண்கலம் என மொத்தமாக 81 பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளன. 

தெற்காசிய நாடுகளில் முன்னிலை வகிக்கும் இந்தியா வெறுமனே ஒரேயொரு வெண்கலப்பதக்கத்தை மாத்திரமே வென்றுள்ளதுடன், இலங்கை இதுவரை ஒரு பதக்கத்தைக்கூட வென்றதில்லை.

ஆசிய மேசைப்பந்தாட்ட வல்லவர் போட்டியில் சீனாவின் ஆதிக்கத்துக்கு இந்த பதக்க நிலை சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது. ஆகவே, சீனாவின் ஆதிக்கம் இம்முறையும் தொடரும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.