(எம்.எம்.சில்‍வெஸ்டர்)

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தான் ஏ கிரிக்கெட் அணி ஆகியன இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணம் மற்றும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணம் ஆகிய இரண்டு தொடர்களுக்கான தயார்படுத்தலுக்காகவே இந்த ‍போட்டித் தொடர்களை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இதன்படி பாகிஸ்தான் ஏ அணியானது இலங்கை ஏ அணியை 4 நாட்கள் கொண்ட முதற்தர போட்டிகள் இரண்டிலும், 50 ஓவர்கள் கொண்ட போட்டிகள் மூன்றிலும் விளையாடவுள்ளது. இப்போட்டிகள் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ள 50 ஓவர்கள் கொண்ட 5 போட்டிகளில் 19 வயதுக்குட்பட்ட இலங்‍கை அணியும் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணியும் எதிர்த்தாடவுள்ளன. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை ஏ கிரிக்கெட் அணியைப் போலவே, 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணிக்கும்  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் சந்தரப்பம் கிடைக்கவில்லை. 

இலங்‍கை ஏ அணியானது கடைசியாக 2019 ஆம் ஆண்டில் முதற்தர  போட்டிகளில் இரண்டிலும், 50 ஓவர்கள் கொண்ட போட்டிகள் மூன்றிலும் பங்களாதேஷ் ஏ அணியுடன் விளையாடியிருந்ததுடன், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி கடைசியாக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட 50 ஓவர்கள் கொண்ட போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.