பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (21) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற  வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இந்தத் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

அதற்கமைய, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (22)  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தத் (திருத்தச்) சட்டமூலம், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படவுள்ளது. 

அதன்படி, தனி வர்த்தகம், நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்கள் தொடர்பிலும் இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதம் திருத்தம் செய்யப்படவுள்ளது. 

மேலும், இது தொடர்பில் ஒரு நீதிவான் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்குப் பின்னர், குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்கள் மீது இந்த அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

நேற்று இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, அண்மைக்காலமாக அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், சந்தையில் அந்த கட்டுப்பாட்டு விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என குறிப்பிட்டார். அதனால் இந்த அபராத தொகையை திருத்துவதற்கு தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, புத்திக்க பத்திரன, அனுப பஸ்குவல், ரோஹன திசாநாயக்க, மர்ஜான் பளீல்,  நிரோஷான் பெரேரா, நலின் பிரனாந்து ஆகியோர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

மேலும், வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஒன்லைன் ஊடாக இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.