(நா.தனுஜா)

அண்மையில் நாடளாவிய ரீதியில் பதிவாகும் கொவிட் - 19 வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு வீழ்ச்சியேற்பட்டிருக்கின்றது. பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாகவே தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. மாறாக அண்மையில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக்கட்டுப்பாடுகள் மற்றும் செயற்திறனான தடுப்பூசி வழங்கல் ஆகியவற்றின் பிரதிபலனாகவே இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என்று தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்தியநிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

'நிச்சயமாக வசந்தம் உதயமாகும்' என்ற தலைப்பில் ஊடக அமைச்சுடன் இணைந்து இலங்கை இலத்திரனியல் ஊடக அமையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அண்மைக்காலத்தில் பதிவாகும் கொவிட் - 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவான வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகிவந்த கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.

அதுமாத்திரமன்றி கடந்த இருமாதங்களுக்கு முன்னர் தொற்றினால் வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்பட்டதுடன் அதனை முகாமைசெய்வது சவாலுக்குரிய விடயமாக இருந்தது. இருப்பினும் அண்மையில் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. அதன் காரணமாக வைத்தியசாலைகளில் கொவிட் - 19 தொற்றாளர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரிவுகளில் கட்டில்கள் எஞ்சியிருக்கின்றன. அதேபோன்று முன்னர் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அவதானநிலை உருவாகியிருந்தபோதிலும், தற்போது அது இல்லாமல் போயுள்ளது. ஆகவே அண்மைக்காலத்தில் விதிக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பிரதிபலன்களாக இவற்றைக் கருதமுடியும்.

அதுமாத்திரமன்றி தொற்றுக்குள்ளான போதிலும், நோய்நிலைமை தீவிரமடையாதபட்சத்தில் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவதனாலும் வைத்தியசாலைகளில் நெருக்கடி குறைந்திருக்கின்றது. இருப்பினும் அண்மையில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதனாலேயே தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை.

அதேவேளை நாடளாவிய ரீதியில் செயற்திறனான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தடுப்பூசி வழங்கல் பணிகளும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தடுப்பூசியின் மூலம் கொவிட் - 19 வைரஸ் தொற்றின் தீவிரத்தன்மையையும் தொற்றினால் மரணம் சம்பவிப்பதையும் கட்டுப்படுத்தமுடியும். இருப்பினும் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டதன் பின்னரும் தொற்று ஏற்படக்கூடும் என்பதுடன் ஒப்பீட்டளவில் அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.

எனவே அலட்சியமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதுடன் ஏனைய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுவதன் ஊடாகவே இந்த நோய்த்தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெறமுடியும். எமது நாட்டில் மாத்திரமன்றி உலகநாடுகளிலும் பலர் தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள். கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த மாதம் பதிவான 239 மரணங்களில் 220 பேர் முதலாம், இரண்டாம் கட்டத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களாவர். எனவே தடுப்பூசியைப் பெறுவதன் ஊடாக தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களைப் பெருமளவிற்குக் குறைத்துக்கொள்ளமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மேலும் கொவிட் - 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் அக்காலப்பகுதியில் நன்கு ஓய்வெடுப்பது மிகவும் அவசியமாகும். தொற்றுக்குள்ளானவர்கள் உடலைக் களைப்படையச்செய்யும் வேலைகளில் ஈடுபட்டு, அதனால் உடலில் ஒட்சிசனின் அளவு குறைவடைந்து பின்னர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே தொற்றாளர்களைப் பொறுத்தமட்டில் ஓய்வு என்பது மிகமுக்கியமானதாகும். அதேவேளை முழுமையாகக் குணமடைந்ததன் பின்னர் ஓய்விலேயே இருப்பதைத் தவிர்த்துக்கொண்டு, தமது அன்றாட வாழ்க்கைமுறைக்குத் திரும்பவேண்டும் என்று குறிப்பிட்டார். 

--