வீரகெட்டிய துப்பாக்கிச் சூட்டில் 14 வயதுடைய சிறுவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேக நபர், மேலும் ஒரு நபருடன் காட்டுப் பகுதியொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே நேற்றிரவு வீரகெட்டிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையின்போது கொலைக்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கியொன்றும், உள்ளூர் துப்பாக்கியொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் வலஸ்முல்ல நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீரகெட்டிய பகுதியில் கடந்த செப்டெம்பர் 19 அன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கஜநாயக்ககம பகுதியில் வசிக்கும் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுவனது உறவினர்கள் குழுவினரிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் முன்னதாக கைதுசெய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.