(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள பிணைக் கோரிக்கை தொடர்பிலான வாதங்கள் எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

ரிஷாத்திற்கு எதிராக சிறைச்சாலை நீதிமன்றில் விசாரணைகளை நடத்த திட்டம் |  Virakesari.lk

ரிஷாத் பதியுதீன் சார்பில் பிணை கோரி வாதங்களை முன் வைக்க ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையில்  சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழுவினர் தயாராக இருந்த போதும்,  சட்ட மா அதிபர் சார்பில் எவரும்  ஆஜராகாமையால் இவ்வாறு குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  நீதிமன்றம் அறிவித்தும், சட்ட மா அதிபர் சார்பில் எவரும் ஆஜராகாமை இது 2 ஆவது முறையாகும்.

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவை இன்று, கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில்  மீள விசாரணைக்கு வந்தது.

அதில் 7 சந்தேக நபர்கள் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே வேறு குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

 இந் நிலையில் இன்றைய தினம் 7 ஆவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி  ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழுவினருடன் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன ஆஜரானார்.

 விசாரணையாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர்  குமாரசிங்க,  உப பொலிஸ் பரிசோதகர்  கண்ணங்கர ஆகியோர் ஆஜராகினர்.

 எனினும் வழக்கு விசாரணைகள் ஆரம்பித்த போது மன்றுக்கு விடயங்களை முன் வைத்த சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கண்னங்கர,  நாட்டில் நிலவும் தற்போதைய சூழலில், இன்ரைய தினம் ( 21) மன்றில் ஆஜராவது கடினம் என சட்ட மா அதிபர் திணைக்களம் தமக்கு தெரிவித்துள்ளதாகவும், பிரிதொரு தினத்தினை  அதற்காக பெற்றுக்கொள்ள அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

 இதன்போது, ஏற்கனவே  முன்னாள் அமைச்சர் ரிஷத் பதியுதீன் சார்பில் முன் வைக்கப்பட்டுள்ள எழுத்து மூல சமர்ப்பணங்களுக்கு பதில்கள் சமர்ப்பிக்கப்பட்டனவா என  நீதிவான் பிரியந்த லியனகே  சி.ஐ.டி. அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் இல்லை எனவும், எதிர்வரும் திகதிக்குள் சமர்ப்பிப்பதாகவும் கூறினர்.

 இதன்போது மன்றில் ஆஜராகியிருந்த ரிஷத்தின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி  அனுஜ பிரேமரத்ன, எந்த சாட்சிகளும் இன்றி தனது சேவை பெறுநர் விளக்கமறியலில் இருந்து வருவதாகவும்,  கைது, விளக்கமறியல் உத்தரவு பெற எந்த நேரத்திலும் ஓடி வருபவர்கள், ஒருவரின் பிணைக் கோரிக்கை தொடர்பில் பதிலளிக்க வராது ஒழிவது நியாயமற்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

 இந் நிலையிலேயே சி.ஐ.டி. சார்பில் எழுத்து மூல சமர்ப்பணங்கள் எதிர்வரும் வழக்குத் திக்திக்குள் முன் வைக்கப்படல் வேண்டும் என உத்தரவிட்ட நீதிவான் வழக்கு தொடர்பிலான விசாரணைகளை ஒக்டோபர் 5 ஆம் திகதிக்கு  ஒத்தி வைத்தார்.