இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள்.

அமரர் கல்கி எழுதி உலகத் தமிழர்களிடையே அமரத்துவம் பெற்ற நாவல் இலக்கிய படைப்பு 'பொன்னியின் செல்வன்'. 

இந்த நாவலை இயக்குனர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படமொன்றை இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கிறார்.

 இதில் நடிகர்கள் கார்த்தி, சீயான் விக்ரம், ஜெயம் ரவி, இளைய திலகம் பிரபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கிறார்கள். 

கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். 

அத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ் திரைஉலகில் மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர், உலகநாயகன் கமல்ஹாசன் என பலர் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

அது பூர்த்தி ஆகாத நிலையில் லைகா நிறுவனமும், இயக்குனர் மணிரத்னமும் இணைந்து கடின உழைப்பு, பொறுமை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் கூட்டணியுடன் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதற்காக ரசிகர்கள் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.