(எம்.சி.நஜிமுதீன்)

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டம்  கைவிடப்பட்டுள்ளது. எனினும் அங்கு மாற்று மின் நிலையம் அமைக்கும் யோசனை கைவிடப்படவில்லை என மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார்.

மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டமைக்கு பல்வேறு காரணங்கள் பின்ணணியில் உள்ளன. எனினும் அவை அனைத்தும் உரிய வழிமுறைகளின் பிரகாரம் ஆராய்ந்த பின்னரே திட்டம் கைவிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் அனல் மின் நிலையங்களை தடைசெய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும் அதனை தொடர்ந்தும் பேண வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

எனவே அது தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமரினால் குழுவொன்று நியமிக்கபட்டுள்ளது. அக்குழு சம்பூர் தவிர்ந்த ஏனைய பிரதேசஙங்களில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளது ஆகவே அக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் எதிர்காலத்தில் பாதிப்பில்லாத வகையில் அனல் மின் நிலையம் உட்படட ஏனைய மின்நிலையங்கள் அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும். 

அனல் மின் நிலையங்களை நாட்டில் முழுமையாக தடைசெய்து ஏனைய  மின் உற்பத்தி முறைமைகளை மாத்திரம் நம்பியிருந்தால் எதிர்காலத்தில் இத்துறையில் பாரியளவிலான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என பொறியிலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அத்துடன் ஏராளமான நாடுகள் அனல் மின்சாரத் திட்டத்தை முழுமையாக கைவிடவில்லை.  இந்தியாவும் அத்திட்டத்தை முழுமையாக கைவிடவில்லை.  

ஆகவே குறித்த குழு நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அனல் மின்சாம் பெறும் வழிவகைகள் பற்றி அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும். அத்துடன் நாட்டின் மின்சாரத் தேவையினை கருத்திக் கொண்டு சூரிய சக்தி மூலம் மின்சாரம் பெறும் திட்டமும் கடந்த ஆறாம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தின் மூலம் மின்சாரம் பெறும் நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.