இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் பிபிபி எனப்படும் 'பிளான் பண்ணி பண்ணனும்  திரைப்படம் 100 சதவீத நகைச்சுவைத் திரைப்படம்' என அப்படத்தின் நாயகி ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார்.

பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சிந்தன் மற்றும் ராஜேஷ் குமார் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. 

இந்த திரைப்படத்தில் நடிகர் ரியோ ராஜ் கதையின் நாயகனாக, நடிக்க அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பால சரவணன், பூர்ணிமா ரவி, சித்தார்த் விபின், எம்எஸ் பாஸ்கர், நடிகை அனைகா சோட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி நடிகை ரம்யா நம்பீசன் பேசுகையில்,' இந்த திரைப்படத்தின் தொடக்கம் முதல் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்றது வரை அனைத்தையும் இயக்குனரும், படக்குழுவினரும் பிளான் பண்ணி செய்தனர். 

ஆனால் கொரோனா வேறுவகையான பிளானை எங்கள் மீது திணித்தது. இதன்காரணமாக 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் வெளியீட்டை நாங்கள் பலமுறை ப்ளான் செய்தாலும் நடைமுறை வேறாக இருந்தது. இறுதியில் செப்டம்பர் 24ஆம் திகதி இப்படம் வெளியாகிறது.

பிபிபி என்ற என நாங்கள் அழைக்கும் 'பிளான் பண்ணி பண்ணனும்', ரசிகர்களுக்கு 100% மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படம். 

இரண்டு மணி நேரம் வயிறு குலுங்க சிரித்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்தப்படத்தில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறேன்.

கொரோனா காலத்தில் பல டிஜிட்டல் தளங்கள் இப்படத்தை வெளியிட முன்வந்தாலும், படத்தின் தயாரிப்பாளர்கள் இது பட மாளிகையில் தான் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, இப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். ரசிகர்களின் ஆதரவை கூடுதலாக எதிர்பார்க்கிறோம்.' என்றார் நடிகை ரம்யா நம்பீசன்.