(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு மாகாணத்தில் உள்ள தபாலகங்கள், உப தபாலகங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அமைச்சு ஆலோசனைக்கூட்டத்திற்கு வருமாறு வடக்கு  மாகாண எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுத்த வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும, வடக்கு மாகாணத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் உப தபாலகங்கள் அமைக்கும் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் காலை  10 மணிக்கு கூடியதையடுத்து இடம்பெற்ற வாய் மூல விடைக்கான  வினா நேரத்தின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த அழைப்பை விடுத்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்குகின்ற தபாலகங்கள், உப தபாலகங்களின் செயற்பாடுகள், எண்ணிக்கைகள், நிரந்தர காணி, கட்டிடங்கள் கொண்ட  தபாலகங்கள், உப தபாலகங்களின் எண்ணிக்கைகள் பாரதிபுரம், புன்னை நீராவி, பள்ளிக்குடா ஆகிய பிரதேசங்களில்  உபதபாலகங்கள் அமைக்கப்பட வேண்டியதன்  அவசியம், 2016.09.05 ஆம் திகதி அப்போதைய அமைச்சருக்கு  தன்னால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்குஅமைய  தபால் மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2016.09.09 ஆம் திகதி கடிதம் தொடர்பாக  இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமைக்கான காரணம் மற்றும் உப தபாலகங்களுக்கு நிரந்தர கட்டிட வசதிகள் பெற்றுக்கொடுத்தல் தொடர்பில் கேள்விகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீதரன் எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் டலஸ் அழகப்பெரும பதிலளிக்கையில், 

கிளிநொச்சி  மாவட்டத்தில் இயங்குகின்ற தபாலகங்கள் மற்றும் உபதபாலகங்கள் வகைப்கப்படுத்தலுக்கு அமைய சீராக செயற்படுகின்றன. 

கிளிநொச்சி  மாவட்டத்தில் 4 தபாலகங்களும் 37 உப தபாலகங்களும் உள்ளன. 4 தபாலகங்களுக்கும் 14 உப தபாலகங்களுக்கும் நிரந்தர கட்டிடங்கள்  உள்ளன. உப தபாலகங்கள் அமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாணத்தில் மட்டுமன்றி நாடு முழுவதும் இப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆளணி பற்றாக்குறை காரணமாகவே உப தபாலகங்கள் அமைக்கும்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில்  இயங்குகின்ற தபாலகங்கள், உப தபாலகங்களின் பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் தயாராகவே உள்ளோம். 

எனவே எமது அடுத்த அமைச்சு ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் வடக்கு மாகாண எம்.பி.க்களை  பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். அதில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், தபாலமா அதிபரையும் அழைத்து ஒரே மேசையில் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்றார்.