புத்தளம் கற்பிட்டி - பாலாவி பிரதான வீதியின் அல்அக்ஷா பாடசாலை சந்திக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த காசி முஹைதீன் முஹைதீன் பிச்சை (வயது 59) எனும் 6 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

கூலித் தொழிலாளியான குறித்த நபர், சம்பவம் இடம்பெற்ற திங்கட்கிழமை மாலை கற்பிட்டி பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் வேலை செய்துவிட்டு துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, கெப் வாகனம் ஒன்று மோதியுள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபரை அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த நபரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையிலிருந்து புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டு, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை மேலும் தெரிவித்தார்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.