மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்டோருக்கான பிரிமா சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டி இம் முறை 10ஆவது ஆண்டாக தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

பிரிமா குழுமம் இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டுக்கான பிரிமா சம்பியன் கிண்ண போட்டிகளை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் நிறைவுசெய்துள்ளது.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு அண்மையில் இலங்கை கிரிக்கெட் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிலையில், இவ்வாண்டுக்கான இறுதிப் போட்டி இம்மாதம் 29 ஆம் மற்றும் 30 ஆம் திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதையும் சேர்ந்த 800 வீரர்கள் பங்குபற்றுகின்றனர்.

32 அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடும் இப் போட்டித் தொடரின் இறுதியில் மாவட்ட ரீதியாக சிறந்த வீரர்கள்  மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இதேவேளை, மாகாண சம்பியன் போட்டிக்கு 10 அணிகள் போட்டியிடவுள்ளன.  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய 5 மாவட்டங்களிலுமிருந்து மாவட்ட அணிகள் களமிறங்கவுள்ளமை விஷேட அம்சமாகும்.

தேசிய அணியில் விளையாடும் குஷல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, பினுர பெர்னாண்டோ  போன்ற வீரர்கள் கடந்த காலங்களில் பிரிமா கிண்ண போட்டிகளில் விளையாடியமை குறிப்பிடத்தக்கது.