(எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அரசாங்கத்தினால் இதுவரை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போயிருக்கின்றது. அதனால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த காலங்களில் மேற்கொண்ட வைத்தியர் ஷாபி சஹாப்தீன், சஹரான் போன்ற கீழ்த்தரமான நாடங்களை அரங்கேற்றியதுபோல், மேலும் இவ்வாறான நாடங்களை அரங்கேற்றவேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை அரசாங்கத்துக்கு இதுவரை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போயிருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு அனைத்து தரப்பிரனரை இணைத்துக்கொண்டு செல்லவேண்டிய நிலையே அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அதேபோன்று ஜெனிவா உட்பட சர்வதேச ரீதியில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கு சர்வதேச நாடுகளை இணைத்துக்கொண்டு செயற்படவேண்டிய பயணத்தையே அரசாங்கம் மேற்கொள்ளவேண்டி இருக்கின்றது. 

அவ்வாறு இல்லாமல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த காலங்களில் மேற்கொண்ட வைத்தியர் ஷாபி சஹாப்தீன், சஹரான் போன்ற கீழ்த்தரமான நாடங்களை அரங்கேற்றி அதிகாரத்தை பெற்றுக்கொண்டதுபோல், மேலும் இவ்வாறான நாடங்களை அரங்கேற்றவேண்டாம் என்றே தெரிவிக்கின்றோம். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொது மக்களுக்கு இருக்கும் சந்தேகம். கத்தோலிக்க மக்களுக்கு இருக்கும் சந்தேகம் முழு நாட்டிலும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்கவேண்டும்.

மேலும் புலனாய்வு பிரிவினருக்கும் தெளஹீத் ஜமாத் இயக்கத்துக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும். அதேபோன்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளிப்படுத்தாமல் இருக்கும் 22 பாகங்களையும் உடனடியாக வெளிப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்துக்கு விடுக்கின்றோம். 

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்தே அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் இந்த தாக்குதல் சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் நல்லாட்சி அரசாங்கத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமே அரசாங்கம் இன்னும் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு இல்லாமல் இந்த சம்பவத்துடன் வேறு எவரையும் அரசாங்கம் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யவில்லை. அதேபோன்று இந்த தாக்குதலின் பின்னால் இருந்த சூத்திரதாரியையும் அரசாங்கத்தினால் இதுவரை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கின்றது என்றார்.