(எம்.ஆர்.எம்.வசீம்)

மதுவரி ஆணையாளருக்கு தெரியாமல் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருந்தால் அது பாரிய பிரச்சினையாகும். அதனால் மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி அளித்திருப்பது தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருப்பதை ஊடகங்கள் மூலமே நானும் தெரிந்துகொண்டேன். மதுவரி ஆணையாளருக்கு தெரியாமல் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருந்தால் அது பாரிய விடயம்.

அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும். மதுபானசாலைகள் திறப்பதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்கவில்லை.

சுகாதார பிரிவினரும் அனுமதி வழங்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. அப்படியென்றால் யாருடைய உத்தரவில் திறக்கப்பட்டது என்பது தொடர்பில் பார்க்கவேண்டும்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மதுபானசாலைகளை திறந்து வைப்பது பொருத்தமான விடயமாக தெரியவில்லை. அப்படியானால் அரச ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில்தான் இருக்கவேண்டி வரும். 

கொவிட் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் வரையறைகளை விதித்திருக்கும் நிலையில் மதுபானசாலைகளை திறக்கவேண்டிய தேவையில்லை.

அவ்வாறு இருந்தும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என நிதி அமைச்சிடமும் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்த நடவடிக்கை அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு மேற்கொள்ளப்பட்டதா, மதுபானசாலை உரிமையாளர்களின் தேவைக்காக இடம்பெறுகின்றதா அல்லது அவர்களிடம் மதுபானம் அருந்தும் அரச அதிகாரின் விருப்பத்திற்கமைய இடம்பெற்றதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்கவேண்டும் என்றார்.