கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்திய மருத்துவ நடைமுறைகளில், அடிக்கடி கைகளை சானிடைசர் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒன்று.

இதனால் எம்மில் பலரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வெளியில் செல்லும்போதும், வீட்டில் இருக்கும் பொழுதும் அடிக்கடி சானிடைசரை பயன்படுத்தி தங்களது கைகளை சுத்தப் படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பலருக்கு எக்ஸீமா எனப்படும் சரும பாதிப்பு உண்டாகுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

ஹேண்ட் சானிடைசர் எனப்படும்  கிருமிநாசினி திரவத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக ஆல்கஹால் இடம்பெற்றிருக்கிறது.

ஆல்கஹால் கலந்த சானிடைசர் தொடர்ந்து பயன்படுத்துவதால் மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு எக்ஸீமா என்னும் சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு இதன் காரணமாக தோல் வறட்சி, தோல் எரிச்சல், தோல் சிவந்து போதல், நீர்வடிதல் போன்ற பல பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இதனால் மருத்துவ நிபுணர்கள் இந்த ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்துவதை குறைத்துக்கொண்டு, மென்மையான சோப்பினை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது சிறந்தது என பரிந்துரைக்கிறார்கள்.

மேலும் வெதுவெதுப்பான நீரை உபயோகப்படுத்தி கைகளை கழுவ வேண்டும் என்றும், கைகளை கழுவிய பிறகு மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

மேலும் மென்மையான சருமம் உள்ளவர்கள் கையுறையை பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரைக்கிறார்கள். கைகளில் ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஒருபோதும் ஆல்கஹால் கலந்த சானிடைசரை பயன்படுத்தக்கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

டொக்டர் தீப்தி
தொகுப்பு அனுஷா.