(இராஜதுரை ஹஷான்)

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின்  நேர அட்டவணைக்கு அமைய விமான சேவையினை முன்னெடுக்கும் விமான நிறுவனங்களுக்கு  விசேட நிவாரண பொதி வழங்கப்படும்.

சர்வதேச விமான சேவைகள் மத்தள விமான நிலையத்தை ஈர்க்கும் வகையில் புதிய செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

 சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இதற்கமைய இதுவரையில் மத்தள விமான நிலையத்தின் சேவையினை பெற்றுக் கொள்ளாத சர்வதேச விமான சேவையின் விமானங்கள் மத்தள விமான நிலையத்தின் சேவையை பெற்றுக் கொண்ட தினத்திலிருந்து இரண்டு வருட காலத்திற்கு 60 டொலர் அகழ்வு  வரி அறவிடுவதில் இருந்து நீக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தரையிறக்குவதற்கும், விமானத்தை நிறுத்தி வைப்பதற்கும், அறவிடும்  கட்டணத்திற்கான அந்நிவாரணத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் சேவையை பெற்றுக் கொண்ட  தினத்திலிருந்து நான்கு வருட காலத்திற்கு  இந்த கட்டணத்திற்காக விசேட கழிவு வழங்கப்படும்.

முதல் வருடத்தில் 100 சதவீத கழிவில்  விமானத்தை தரையிறக்கல் மற்றும் நிறுத்தி வைத்தலுக்கான கட்டணத்தில் இருந்து விடுவிக்கவும்,இரண்டாம் வருடத்தில் 75 சதவீத கழிவும், மூன்றாம் வருடத்தில் 50 சதவீத கழிவும், நான்காவது வருடத்தில் 25 சதவீத கழிவும் வழங்கப்படும்.

கொவிட் -19வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்திலான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையத்தில் சேவையை ஆரம்பிக்க விரும்பும் விமான சேவை நிறுவனங்களை இலக்காகக்கொண்டு புதிய நிவாரண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.