சி.ஐ.டி.யில் ஆஜராகாத மனுஷ : காரணம் கோரிய சட்டத்தரணி

By Digital Desk 2

20 Sep, 2021 | 05:51 PM
image

எம்.எப்.எம்.பஸீர்

சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை ஒன்றுக்கான வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இன்று திங்கட்கிழமை  சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு அறிவித்தல் அனுப்பட்டிருந்த போதும் அவர் அங்கு செல்லவில்லை.

இன்று  காலை 9.00 மணிக்கு சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவில் விசாரணைகளுக்காக ஆஜராகுமாறு, நாரஹேன்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக இந்த அறிவித்தல் மனுஷ நாணயக்காரவுக்கு அனுப்பப்படும், அவர் விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், அவரது சட்டத்தரணி ஊடாக கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 மனுஷ நாணயக்கார எம்.பி. சார்பில் இன்று சி.ஐ.டி.க்கு சமூகமளித்த  அவரது சட்டத்தரணி  புத்தி சிறிவர்தன பின்வருமாறு தெரிவித்தார்.

'இன்று (20) பாராளுமன்ற உறுப்பினர்  மனுஷ நாணயக்காரவை சி.ஐ.டி.க்கு அழைத்திருந்தனர்.  எதற்காக அழைத்தார்கள் என்பது தொடர்பில் வழங்கப்பட்டிருந்த அறிவித்தலில் எதுவும் இருக்கவில்லை. 

எதற்காக வரச்சொன்னீர்கள் என்று வினவியே இன்று நாம் சி.ஐ.டி.க்கு கடிதம் கையளித்தோம்.  சி.ஐ.டி.யின்  பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம்.' என தெரிவித்தார்.

இந்நிலையில் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்னவின் கீழ் விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right