இராஜதுரை ஹஷான்

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டம் தீவிரமடைவதற்கு  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே பிரதான காரணம். 

போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை தீவிரவாதிகள்  என குறிப்பிட்டுக் கொண்டு ஹிட்லரை போன்று செயற்பட முயற்சிக்கிறார்.இதனால் அரசாங்கமே நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

 எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு கிடையாது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின், பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக முதலில் முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடிமட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளை ஒரு சில அமைச்சர்கள் தங்களின் அதிகாரத்தை பிரயோகித்து  தாக்குவது  வெறுக்கத்தக்க விடயமாகும். 

தற்போதும் இந்நிலையே காணப்படுகிறது.மக்களின் பிரச்சினைகளையும், ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டும் போது  ஆளும் தரப்பின் அரசியல்வாதிகள் அதற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

இவ்வாறானவர்களினால் தான் ஜனாதிபதியின் தீர்மானங்களும் தவறாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமனத்தில் நான் அழுத்தம் பிரயோகித்ததாக அமைச்சர் சரத் வீரசேகர பொய்யுரைக்கிறார். 

பாதுக்க பகுதிக்கு பொருத்தமான ஒரு அதிகாரியை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்தேனே, தவிர அழுத்தம் பிரயோகிக்கவில்லை.

 எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் எடுத்த தீர்மானத்தை கேள்விக்குள்ளாக்கி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அரசாங்கத்தையும்,கட்சியையும் இவர் நெருக்கடிக்குள்ளாக்கினார்.

இப்பிரச்சினைகள் அனைத்தையும் ஜனாதிபதியிடம் ஆதாரபூரவமாக குறிப்பிட்டுள்ளேன்.  விரைவில் சிறந்த தீர்மானம்கிடைக்கப் பெறும் என்றார்.