இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர ஆகியோரின் வருகை தமது அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித் தலைவர் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2021: ஆர்சிபி அணியில் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர ஒப்பந்தம்! -  Pagetamil

அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறுகின்றமை, குறிப்பாக ஐக்கிய அரபு இராச்சிய ஆடுகள நிலைமைகளில் இரண்டாம் கட்டப் போட்டிகளின் போது மிகுந்த உதவியாக இருக்கும் என கோஹ்லி மேலும் குறிப்பிட்டார்.

அடம் ஸம்ப்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் விலகிக்கொண்டுள்ளமை அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்ட அவர், உப கண்ட நிலைமைகளை நன்கு அறிந்தவர்களையே மாற்று வீரர்களாக அணி முகாமைத்துவத்தினர் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார்.

'அவர்கள் இருவருக்குப் பதிலாக இங்குள்ள நிலைமைகளை அறிந்துள்ள வீரர்கள் இருவரையே நாங்கள் தேர்வு செய்துள்ளோம்.

ஐக்கிய இராச்சியத்திலும் உபகண்டத்திலும் ஆடுகளங்களின் தன்மைகள் ஒரே மாதிரியானவை. வனிந்து ஹசரங்கவும் துஷ்மன்த சமீரவும் இலங்கைக்காக நிறைய விளையாடியுள்ளனர்.

இங்குள்ள ஆடுகளங்களில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களது ஆற்றல் எமது அணிக்கு மிகுந்த உதவியாக இருக்கும்' என கோஹ்லி தெரிவித்தார்.

'அணியின் பண்பட்ட நிலை மற்றும் திட்டங்களை நன்கு அறிந்தவர்களாக அவர்கள் இருவரும் அணியில் இணைந்துள்ளனர்.

இதனால் ஏனையவர்களும் தற்போது உற்காகம் அடைந்துள்ளனர். நாங்கள் எதையெல்லாம் தவறவிட்டோம் என்பது குறித்து கவனம் செலுத்தவில்லை.

ஆனால், புதியவர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் நாங்கள் பலசாலிகள் என்பதை உணர்கின்றோம்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வனிந்து ஹசரங்க நேரடியாக இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் விளையாடியுள்ள 25 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 17 போட்டிகள் உபகண்டத்தில் விளையாடப்பட்டுள்ளன. 14.66 என்ற சராசரியுடன் அவர் 26 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். அவரது எக்கனொமி ரேட் 6.60 ஆகும்.

பின்வரிசை துடுப்பாட்டத்திலும் ஹசரங்க பிரகாசித்து வருகின்றமை போனசாக அமைகின்றது.

வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர அண்மையில் மீண்டும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளதுடன் தற்போது மூவகை கிரிக்கெட்டிலும் விளையாடிவருகின்றார்.

கடைசியாக விளையாடிய 12 சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 15 விக்கெட்களைக் கைப்ற்றியுள்ள துஷ்மன்த சமீரவின் சராசரி 17.86 என்பதுடன் எக்கனொமி; ரேட் 6.51 ஆகும்.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நாளைய தினம் அபுதாபியில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.  

 (என்வீ.ஏ.)