(எம்.எப்.எம்.பஸீர்)

தெற்கு கரையிலிருந்து 850 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள அழ் கடலில், வெளிநாட்டு மீனவப் படகில் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தும் போது, சுமார் 170 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட 9 பாகிஸ்தானியர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.  

குறித்த சந்தேக நபர்கள் நேற்று 18 ஆம் திகதி, கரைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பனியகத்தினரிடம் கையளிக்கப்ப்ட்டிருந்த நிலையில், இன்று  (19) அவர்கள் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். 

இதன்போது அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

 தடுப்புக் காவல் விசாரணையின் போது,   மொழி பெயர்ப்பளர் ஒருவரின் உதவியைப் பெற்றுக்கொள்ளவும் இதன்போது நீதிமன்றம் அனுமதியளித்தது.

முன்னதாக மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சரின் கீழான குழுவுக்கு கிடைத்த தகவல் பிரகாரம், தெற்கு ஆழ் கடலில் சிறப்பு சுற்றிவலைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன. 

முதலில் கடந்த ஆகஸ்ட்  மாதம் 30 ஆம் திகதி  336 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி மிக்க 336 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. 

அதன்போது 7 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். தெற்கு கடற்பரப்பில் 740 கடல் மைல் தொலைவில் அந்த சுற்றிவலைப்பு இடம்பெற்றிருந்தது. அதன்போது கைதானோரும் தடுப்புக் காவலின் கீழ் விசாரிக்கப்பட்டனர்.

 இந் நிலையிலேயே தெற்கு கரையிலிருந்து 850 கடல் மைல்களுக்கு அப்பால்  கடந்த 10 ஆம் திகதி இரவு  150 பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட ஹெரோயினுடன் 9 ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஈரான் நாட்டவர்களாக இருந்த போதும் தற்போது பாகிஸ்தானிலேயே வசித்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். அதனால் அவர்களை பாகிஸ்தான் பிரஜைகளாக கருத முடியும் என அவர்கள் கூறினர்.

 இந் நிலையில் இன்று   (18) சந்தேக நபர்கள் , ஹெரோயின் தொகை, கடத்தல் மீன் பிடிப் படகுடன்  சுற்றி வலைப்பு அதிகாரிகளால் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 

இவ்வாறு எடுத்து வரப்பட்ட ஹெரோயின் தொகையின் பெறுமதி 170 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் 170 கிலோ 866 கிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.  

இந் நிலையிலேயே பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இன்று மன்றில் ஆஜர் செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப் பொருள்  ஒழிப்பு பணியகத்தின்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜயசிங்கவின் மேற்பார்வையில் போதைப் பொருள்  ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் கீழ் சிறப்பு குழுவினர்  தடுப்புக் காவல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.