ஆர்.யசி

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் வெற்றி மற்றும் நீண்டகால தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் சாதகமான பெறுபேறுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதாகவும், டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்ற நேரங்களில் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளதாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு  நிலைமைகள் குறித்தும், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் குறித்தும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 

இந்த கட்டுப்பாட்டு நிலைமைக்கு இரண்டு பிரதான காரணிகள் தாக்கம் செலுத்தியுள்ளன, ஒன்று துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டமாகும்.

நாட்டில் சகல பகுதிகளிலும் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. 50 வீதமான மக்களுக்கு இவ்வாறு இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.

அதேபோல் இரண்டாவது சாதகமான விடயம் என்னவெனில், நாடு தொடர்ச்சியாக ஆறு வார காலம் முடக்கப்பட்டுள்ளமை புதிய வைரஸ் பரவல் ஏற்படாது தடுக்க காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.