ஐக்கிய அரபு இராச்சியத்தில் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ள இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) இருபது 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான 4 அணிகளில் புதிய வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐபிஎல் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

உபாதைகள் காரணமாக இண்டியன் பிரீமியர் லீக்கிலிருந்து விலகிக்கொண்டுள்ள 16 வீரர்களுக்குப் பதிலாக இலங்கை வீரர்கள் இருவர் உட்பட 16 பேர் மாற்றுவீரர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வருட ஐபிஎல் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான ஏலத்தின் போது இலங்கையிலிருந்து ஒரு வீரரும் தெரிவுசெய்யப்பட்டிருக்கவில்லை.

ஆனால், ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடரவுள்ள ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இலங்கையின் சுழல் பந்து வீச்சு சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அடம் ஸம்ப்பா, டெனியல் சாம்ஸ் ஆகிய இருவருக்குப் பதிலாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் கேன் றிச்சர்ட்சன், பின் அலென், வொஷிங்டன் சுந்தர் ஆகியோருக்குப் பதிலாக ஜோர்ஜ் கார்ட்டன், டிம் டேவிட், ஆகாஷ் தீப் ஆகியோரும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஜொவ்ரா ஆச்சர், அண்ட்றுடை, பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோருக்குப் பதிலாக க்ளென் பிலிப்ஸ், தப்ரெய்ஸ் ஷம்சி, ஓஷேன் தோமஸ், எவின் லூயிஸ் ஆகியோரும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரைலி மேர்டித், ஜய் ரிச்சர்ட்சன், டேவிட் மாலன் ஆகியோருக்குப் பதிலாக நெதன் எலிஸ், ஆதில் ராஷித், ஏய்டன் மார்க்ராம் ஆகியோரும், டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணியில் எம். சித்தார்த்,க்றிஸ் வோக்ஸ் ஆகியோருக்குப் பதிலாக குல்வான்ட் கேஜ்ரோலியா, பென் ட்வாஷுய்ஸ் ஆகியோரும், மும்பை இண்டியன்ஸ் அணியில் மொஹ்சின் கானுக்குப் பதிலாக ரூஷ் கலாரியாவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜொனி பெயார்ஸ்டோவுக்குப் பதிலாக ஷேர்வேன் ரதர்போர்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

றோயல் செலஞ்சர் பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் போட்டி அபு தாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்ரங்கில் நாளை நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் இலங்கையின் வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் விளையாடுவார்களா என்பது நாளைய போட்டிக்கு முன்னரே தெரியவரும்.

என்.வீ.ஏ.