எம்.மனோசித்ரா

நாட்டின் சில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் தங்க ஆபரணக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மித்தெனிய பொலிஸ் பிரிவில் ஜூலம்பிட்டி சந்தியில் தங்காலை குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று சனிக்கிழமை மோட்டார் சைக்கிளொன்று நிறுத்தி சோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதில் பயணித்த நபர் 8 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய ஜூலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். குறித்த சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் அவர் தங்க ஆபரண கொள்ளை சம்பவங்கள் மற்றும் இடங்களை பதிவு செய்தலில் மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

அத்தோடு இவரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 23 வயதுடைய ஜூலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த பிரிதொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரு சந்தேக நபர்களும் வலஸ்முல்ல, பெலியத்த, தங்காலை மற்றும் எம்பிலிபிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது மேலதிக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர்கள் வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு , வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதே போன்று ராகமை பொலிஸ் பிரிவில் வெலிபில்லேவ பிரதேசத்தில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய 31 மற்றும் 30 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த இரு சந்தேநபர்களும் ராகமை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அத்தோடு இவர்களால் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் பலவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.