ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களைத் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட நிலையில், மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அவருக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன் குறித்த இச்சந்தேக நபரை ஒருவருட காலம் புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சீ.விஸ்வலிங்கம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி துப்பாக்கி, கிளைமோர் குண்டு, கைக்குண்டு உள்ளிட்ட வெடிபொருட்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கிருஷ்ணகாந்தன் என்ற குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இவ்வாறு கைது செய்யப்பட்ட அவர் மீது, விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தன்வசம் வைத்திருந்தமை, பயங்கரவாத செயல்களுக்கு உதவியமை ஆகிய குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

 இந்த நிலையில், 38 வயதான கிருஷ்ணகாந்தன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஒருமாதகால கடூழியச் சிறையுடன், ஒருவருடம் புனர்வாழ்விற்கு உட்படுத்துமாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.