(எம்.எப்.எம்.பஸீர்)

பம்பலப்பிட்டி தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மேயர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கொத்தலாவல எவனியூ பிரதேசத்தில் அமைந்துள்ள இடமொன்றுக்குள் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த இரு பாதுகாவலர்களை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹம்பாந்தோட்டை நகர மேயர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸாரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

பம்பலப்பிட்டி  பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து அவர் இவ்வாறு கைது செய்யப்ப்ட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந் நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்த பொலிஸார், அவரை பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி  இரவு வேளையில், தனது காரில், கொத்தலாவல எவனியூ பகுதிக்கு எராஜ் பெர்ணான்டோ தனியாக சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், எந்த காரணத்தையும் கூறாது தன்னையும், தன்னுடன் இருந்த மற்றைய பாதுகாப்பு  உத்தியோகத்தரையும் தாக்கியதாக, தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் ஒருவர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடந்த 15 ஆம் திகதி  முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.