கலைஞனால் எவ்வாறு சாதிக்க முடியும் ? - தனது கலைப்பயணத்தை உதாரணம் காட்டுகிறார் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் 

Published By: Digital Desk 2

19 Sep, 2021 | 08:42 AM
image

எனது கலைப்பயணத்தின் ஆரம்பம் எனது பெற்றோர்களாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. கலைக்குடும்பத்தில் பிறந்ததனாலும், கலைக்கான நமது கலாசாரத்திற்கான மதிப்பினையும் முன்னுரிமையையும் எனது பெற்றோர்கள் வழங்கியதனாலுமே இன்று இந்நிலையை என்னால் அடைய முடிந்திருக்கிறது என்று கூறினால் மிகையாகாது. 

எனது கலையில் மட்டுமன்றி எனது வாழ்க்கையிலும் ஆசான்களாக விளங்கியவர்கள், எனது பெற்றோர்களான மிருதங்க வித்துவான் லயவாரிதி ஶ்ரீ K சண்முகம்பிள்ளை மற்றும் ஶ்ரீமதி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை. சிறுவயது முதல் நடனத்தையும்  சங்கீதத்தையும் எனது தாயாரையே முதற் குருவாகக் கொண்டு கற்றுக்கொண்டேன். என் தாயார் ஆவுடையார் கோவில், தஞ்சாவூர், தமிழ் நாட்டை பூர்விகமாகக் கொண்டவர், திருமணத்தின்பின் இலங்கையிலே தங்கி இந்நாட்டின் கலை வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கியவர். 

எனது பாடசாலைக் கல்விக்குப் பின் இந்தியாவில் சென்னையில் பத்மஸ்ரீ அடையாறு லட்சுமணன் அவர்களின் பரத சூடாமணி நிறுவனத்தில் நடனம், நட்டுவாங்கம் ஆகிய துறைகளில் பயின்று டிப்ளோமா பட்டத்தினைப் பெற்றுக்கொண்டேன். இதற்கு மேலதிகமாக தஞ்சாவூர் ஜெகதாம்பாள், கலாஷேத்திரப் பட்டதாரி திருமதி.கௌரி முத்துக்குமாரசாமி, கலைமாமணி திரு.சுவாமிமலை ராஜரத்தினம் பிள்ளையவர்களிடமும் பரதத்தில் சிறப்புப் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. 

திருமதி. சாந்தா தனஞ்ஜெயன் அவர்களுடன் இணைந்து அவர்களின் வழிகாட்டலுடன் இந்தியாவில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் அனுபவமும் எனக்கு கிடைக்கபெற்றது. 

இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பரதக்கலையில் ஆசானாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியுள்ளேன் என்று கூறும் பொழுது அது என் பாக்கியம் என்றே கருதுகின்றேன், அவர்களில் 136 மாணவர்கள் அரங்கேற்றம் கண்டிருக்கிறார்கள். 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளேன் என்று நினைக்கும் பொழுது எனக்குள் நானே பெருமிதம் கொள்கின்றேன். சாஸ்த்திரீய நடன அடிப்படையிலும் பல புதிய ஆக்கங்களையும் நெறிப்படுத்தி தயாரித்து வருகின்றேன். 

இலங்கையில் பிரதான அரச விழாக்களிலும் கலாசார மற்றும் ஆன்மீக விழாக்களிலும் பொருத்தமான பல நிகழ்ச்சிகளில் நாட்டியக் கலா மந்திர் மாணவர்கள் பங்கேற்றியுளார்கள். அவற்றில் கதனகுதூகலம், நிருத்திய உபகாரம், லாஸ்ய லாவண்யா, நிருத்திய சிருங்கார், லலித லவங்கம், நாட்டியாமிர்தம், காதம்பரி, சிருஷ்டி, பாலபரதம், நிருத்திய சமர்ப்பணம், பதலாலித்யம், நூபுரம், கை வழி நயனம், அபயகரம், நிருத்திய அபிநந்தன, திரி மதுர, சித்ரபரதம், மாலை வசந்தம், நாட்டிய அரங்கம், அபிநய தரங்கிணி, பவித்ர பரதம், நூபுர நாதம், தீம் தரிகிட தா, ரங்கப் பிரதர்ஷனி, பாவ ராக தாளம் என பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். 

எனது முதல் நடனம் 1963ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் பொன்விழாக் கலை நிகழ்ச்சிகளின் போது இடம் பெற்றது. இந்நிகழ்சிகளிற்கு எனது தாயார் விஜயலட்சுமி சண்முகம்பிள்ளையவர்களே பாடி நட்டுவாங்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நடனக்கலைத்துறையில் எனது பங்களிப்பானது அன்று முதல் இன்று வரை 5 தசாப்தங்களுக்கு மேலாக இருந்து வருகிறது.

எனது நடன அரங்கேற்றம் 1976ம் ஆண்டு கொழும்பில் கதிரேசன் மண்டபத்தில் எனது தாயாரின் நடன மற்றும் நட்டுவாங்க அமைப்பின் கீழ் நடைபெற்றது. அதே ஆண்டில் நாட்டியக் கலா மந்திர் நடனக் கலையகத்தை ஸ்தாபித்து மாணவர்களுக்கு பரதம் பயிற்றுவிக்க ஆரம்பித்ததோடு டவர் ஹோல் நிறுவனத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சரசவிபாய நுண்கலை நிலையத்திலும் நடன ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். 

கொழும்புப் பல்கலைக் கழகத்தின் கட்புல அரங்கேற்றுக் கலைகள் பிரிவின் நடனத்துறையில் வருகை விரிவுரையாளராகவும், வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயம் மற்றும் கொழும்பு பிரிஜட்ஸ் கல்லூரியில்  ஆசிரியையாகவும் கொழும்பிலுள்ள இந்திய கலாசார நிலையத்தில் பரதக் கலைப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன். அது மட்டுமன்றி 1987ம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை கடந்த 33 ஆண்டுகளாக  பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் கல்லூரியிலும் நடன ஆசிரியையாக சேவையாற்றியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது.

 1976ம் ஆண்டு நாட்டியக் கலா மந்திர் எனும் நடனப்பள்ளியின் ஆரம்பம் என்று கூறும் பொழுது அது நேரடியாக என்னால் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது அல்ல என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயம்,1950ம் ஆண்டுகளில் எனது தாயார் திருமதி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை அவர்கள் “நாட்டியக் கலா மன்றம்” என்ற பெயரில் கொழும்பில் நடனப்பள்ளி  ஒன்றினை ஸ்தாபித்து அதன்பிறகு 1976ம் ஆண்டில் அதனை என்னிடம் கையளித்தார். 

பல மாணவர்களுடனேயே அந்த நடனப்பள்ளி என்னிடம் கையளிக்கப்பட்டது. ஆக நாட்டியக் கலா மந்திரின் ஆரம்பத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் எனது தாயார் என்றே கூற வேண்டும்.

நாட்டிய நாடகங்கள் பலவற்றிற்கு நடனம் அமைத்து அவற்றை நெறிப்படுத்தி மேடையேற்றியுள்ளேன். அவற்றில் சக்தி, கிருஷ்ணாமிர்தம், ஏழுவகைத் தாண்டவம், நடேஸ்வர அஞ்சலி, திருநாவுக்கரசர், சித்திரைப் பெண், வசந்தோற்சவம், அஷ்ட லக்ஷ்மி, நவ சக்தி, சகுந்தலை, இராமாயணம், நளதமயந்தி, மீனாட்சி திருக்கல்யாணம், சாவித்திரி, கண்ணகி, சாந்த சொரூபி, தமிழன்னைக்கு அணிகலன்கள், சிவதரிசனம், ஸ்கந்தப் பிரபாவம், பூரி ஜகன்நாத், சுவாமி விவேகானந்தர், அருள் தரும் அம்பிகை, அர்ஜூனா, மதுரை மீனாட்சி என பல நாட்டிய நாடகங்கள் பிரபல்யம் வாய்ந்தவையாக விளங்குகின்றன.

 பங்களாதேஷ், மலேசியா, சிங்கப்பூர், தென்ஆபிரிக்கா, கனடா, இங்கிலாந்து, சுவீடன், அவூஸ்திரேலியா போன்ற பல உலக நாடுகளின் சர்வதேச விழாக்களில் எனது மாணவர்கள் பலர் பங்கேற்றியுள்ளனர். 

இந்தியாவில் பெங்களுர், ஹைதராபாத் உட்பட பல நகரங்களிலும் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாட்டியக் கலா மந்திர் பல்வேறு நிகழ்சிகளை வழங்கி வந்துள்ளது. சென்னையில் சங்கீத வித்வ சபை, கலைவாணர் அரங்கம், பாரதீய வித்யா பவன், முத்தமிழ்ப் பேரவை போன்ற கலையரங்கங்களிலும்; கோயம்புத்தூரில் 2010ம் ஆண்டு நடைபெற்ற உலக செம்மொழி மாநாட்டிலும், சிதம்பரம் நடராஜப் பெருமான்; ஆலயத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்வுகளிலும், தஞ்சாவூர் பெரிய கோவில் ஆயிரமாம் ஆண்டு நிறைவுக்கொண்டாட்டங்களிலும், அங்கு நடைபெறும் பிரகன் நாட்டியாஞ்சலியிலும் கும்பகோணம் மயிலாடுதுறை  பந்தணை நல்லூர், திருநள்ளாறு, நாகபட்டினம், திருவானைக்காவல் சிவாலயங்களில் நடைபெறும் நாட்டியாஞ்சலி வைபவங்களிலும் சிறப்பான நடன நிகழ்ச்சிகள் பலவற்றை மேடையேற்றும் வாய்ப்பும், தொடர்ந்தும் 2014 மற்றும் 2021ம் ஆண்டுகளிலும் நாட்டியாஞ்சலி நிகழ்வில் பங்குபற்றும் வாய்ப்பும் எனக்கும் எனது மாணவர்களுக்கும் கிடைக்கப்பெற்றது.

முதலாவது சார்க் உச்சிமாநாடு, எக்ஸ்போ சர்வதேசக் கண்காட்சி, 6வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, உலகச் சைவ மாநாடு, உலக இந்து மாநாடு, பொதுநலவாய மாநாடு. ஐஃபா சர்வதேச திரைப்பட விழாவிலும் நாட்டியக்கலா மந்திரின் நடனங்கள் இடம் பெற்றன. இலங்கையின் சுதந்திரப் பொன்விழாவுக்கென சிறப்பானதொரு நடன நிகழ்ச்சியினை தயாரித்து வழங்கும் சந்தர்ப்பமும் கிட்டியது. 

கலாசார தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு ‘பரத பூஷண திலகம்’ விருதினையும்; இந்து கலாசார ராஜாங்க அமைச்சு ‘கலைச்செம்மல்’ விருதினையும் தேசிய நல்லிணக்க அமைச்சு ‘கலைமாமணி’ விருதினையும், ஜப்பான் நல்லுறவு அமைப்பு ‘புங்கா’ விருதினையும், இலங்கை அரசாங்கம் ‘கலாசூரி’ தேசிய நன்மதிப்புப் பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தது. இவை மட்டுமன்றி சக்தி தொலைக்காட்சிச் சேவை நடத்திய மாபெரும் நாட்டிய விழாவில்  வாழ் நாள் சாதனையாளர் விருதும்  வழங்கி கௌரவித்தார்கள். 

அண்மையில் கம்பன் கழகத்தினால் விபுலானந்தர் விருதும், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால், தமிழ் இலங்கை பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் கலைஞர்களுக்கான 2019 ஆம் ஆண்டு கலைமாமணி விருதினையும் பெற்றுக்கொண்டேன்.                கலாசார அமைச்சின் கலைக்கழகத்தின் அரச நாட்டிய நாடகக்குழு மற்றும் அரச நடனக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளேன்.

எனது 45 வருட அனுபவத்தில் இன்று காணும் அனுபவம் மிகவும் வித்தியாசமானது. ஆம் இணையவழிக் கல்வியைத்தான் கூறுகின்றேன். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நாட்டிய கலா மந்திருடைய கற்கை வழிமுறையும் இணைய வழியூடாகவே இடம்பெற்று வருகின்றது.

தேசிய அரங்குகள் மற்றும் சர்வதேச அரங்குகள் மட்டுமன்றி இணையவழி அரங்குகளிலும் எனது மாணவர்கள் இன்று நாட்டியக் கலையை அரங்கேற்றி வருகின்றார்கள். ஆகவே எப்பேற்பட்ட சவால்களையும் தாண்டி ஒரு கலைஞனால் தன் கலையை நிச்சயமாக வளர்க்க முடியும் என்பது என் கருத்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum Perspective: அனைத்து ஜனாதிபதியின் நபர்கள்...

2024-06-22 13:44:21
news-image

முறைமை மாற்றத்துக்காக வருகின்ற வாய்ப்புக்கள்

2024-06-19 16:07:11
news-image

அணுவாயுதங்களுக்கான செலவிடுதலை அதிகரிக்கும் நாடுகள் !

2024-06-18 16:20:51
news-image

13ஆவது திருத்தத்தில் அரசியல் பந்தாட்டம் ;...

2024-06-18 11:40:13
news-image

Factum Perspective: இலங்கையில் வளர்ச்சியை ஊக்குவிக்கும்...

2024-06-17 15:40:00
news-image

சமூகமயமாக்கலில் பிரத்தியேக வகுப்புக்களின் திசை திரும்பலும்...

2024-06-17 13:19:42
news-image

பல்திறப்புலமையும் பன்முக ஆற்றலும் கொண்ட ஆளுமை...

2024-06-16 21:16:51
news-image

அல்அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க மறுப்பு

2024-06-16 17:12:22
news-image

வவுனியா வடக்கில் மாற்றப்படும் குடிப்பரம்பல் -...

2024-06-16 19:19:17
news-image

சர்வதேச மனித உரிமையும் விநோதமானவர்களும்

2024-06-16 16:38:37
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழர்களுக்கு என்ன...

2024-06-16 16:15:21
news-image

காஸா போர் நிறுத்தம் ‘பிரசாரப்படுத்தப்படும் பாசாங்குகள்’

2024-06-16 16:40:06