ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளின் மேலும் 120,000 டோஸ்கள் இன்று அதிகாலை மொஸ்கோவிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி இந்த தடுப்பூசி அளவுகள் இன்று அதிகாலை 1.52 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

விமான நிலையத்தை வந்தடைந்த 1,450 கிலோ எடையுள்ள இந்த சரக்குகள் விசேடமாக குளிரூட்டப்பட்ட வாகனங்களின் மூலமாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்குவதற்காக இந்த தடுப்பூசி அளவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாட்களுக்குள் கண்டி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி விநியோகிக்கப்படுவதுடன், இந்த வார இறுதிக்குள் இந்த தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கை பூரணமடையும் என்று சுகாதார அமைச்சர் முன்னர் கூறியிருந்தார்.