507 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 16 பாக்.பிரஜைகள் கைது

Published By: Digital Desk 3

18 Sep, 2021 | 11:29 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்வதேச போதைப் பொருள் வலையமைப்பின் ஊடாக இலங்கைக்குள் கடத்தப்படும் போதைப் பொருட்களை  கைப்பற்ற தெற்கு ஆழ் கடலில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் 507 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் அவற்றைக் கடத்தி வந்த 16 பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் பணியகத்திலிருந்து மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்ட, போதைப் பொருள் கடத்தல் குறித்த  விசாரணைகள் தொடர்பில் அனுபவமிக்க பொலிஸ் பரிசோதகர் தாரக சுபோதவுக்கு கிடைத்த தகவலை மையப்படுத்தி, மட்டு. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவின்  ஆலோசனைக்கு அமைய, கடற் படையினரின் உதவியையும் பெற்று நடாத்தப்பட்ட இந்த சிறப்பு  நடவடிக்கைகளில் போதைப் பொருள் கடத்தும் வெளிநாட்டு சிறப்பு மீன் பிடி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டது.

ஏற்கனவே இந்த நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் ஒரு பகுதி கரைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில், இன்று சனிக்கிழமை மற்றொரு பகுதி ( சுமார் 170 கோடி பெறுமதி) கரைக்கு எடுத்து வரப்பட்டது.

இந்த  நடவடிக்கைகளில் ஈடுபட்ட மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தின் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் ஒருவர் சுற்றிவளைப்பின் இடையே சுகயீனம் அடைந்து,  கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில், கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில்  சுற்றிவளைப்பில் பங்கேற்ற மற்றொரு உப பொலிஸ் பரிசோதகரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பு, அதன் பின்னணி தொடர்பில் கைதான பாகிஸ்தனையர்கள் மற்றும் போதைப் பொருள் தொகையினைப் பொறுப்பேற்று பி.என்.பீ. எனபப்டும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இற்றைக்கு இரு மாதங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்  தாரக சுபோதவுக்கு சர்வதேச போதைப் பொருள் வலையமைப்பு தொடர்பில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய நிலையில், அண்மையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சிலர் போதைப் பொருள் வர்த்தகம் செய்து சிக்கியிருந்தனர். இதனால் சிலர்  சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு  நீண்ட நாட்களாக சேவையில் இருந்த பல திறமையான அதிகாரிகள்  இடமாற்றப்பட்டனர். அதன் பிரகாரமே தாரக சுபோத எனும் பிரதான பொலிஸ் பரிசோதகரும் மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த அதிகாரி தனக்கு கிடைத்த தகவலை, தனது மேலதிகாரியான  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்கவுக்கு அறிவித்திருந்தார்.

இதனையடுத்து மிக நீண்ட நாட்களாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவை வழி நடாத்திய அனுபவம் மிக்க, தற்போது கிழக்கின்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக செயற்படும் கமல் சில்வா,மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கருணாரத்ன ஆகியோரின் மேற்பார்வையில்,   சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்க குறித்த தகவலை மையப்படுத்திய நடவடிக்கைகளுக்கான மேலதிக நடவடிக்கைகளை திட்டமிட்டு வழி நடாத்தியுள்ளார்.

அதன்படி, மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சுபோத, மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டார, பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தின் சிறப்புநடவடிக்கை பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆலோக ஆகியோரின்  கீழ் சிறப்பு குழுக்கள் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கும் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதிவான் நீதிமன்றின் உத்தரவும் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பொலிஸ் மா அதிபருக்கும் அறிவித்து கடற்படையின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படியே பொலிஸ் குழுவினர் கடற்படை குழுவினருடன் இணைந்து ஆழ் கடல் சுற்றிவளைப்புக்கு சென்றிருந்தனர்.

அதன்படி முதலில் கடந்த ஆகஸ்ட்  மாதம் 30 ஆம் திகதி  336 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி மிக்க 336 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன்போது 7 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு கொவிட் தொற்றும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அவசர அவசரமாக அவர்கள் கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதியாகும் போது கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.  இந்த சுற்றிவளைப்பில் பங்கேற்ற மட்டக்களப்பு  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தை சேர்ந்த சார்ஜன் ஒருவர் திடீர் சுக்யீனமடைந்ததால் சுற்றிவளைப்பு பூரணமாக முன்னரேயே குறித்த 336 கிலோ ஹெரோயின் மற்றும் சந்தேக நபர்களுடன் துறைமுகத்துக்கு விசாரணைக் குழுவினர் திரும்பினர். தெற்கு கடற்பரப்பில் 740 கடல் மைல் தொலைவில் அந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் சுகயீனம் அடைந்த சுற்றிவளைப்பு அதிகாரி கடந்த 13 ஆம் திகதி கொவிட் நிலைமை காரணமாக உயிரிழந்திருந்தார்.

சுற்றிவளைப்பு அதிகாரிகளும் கடற்படையினரும் இணைந்து இரு கடற்படை கப்பல்களில்  நடவடிக்கைகளை தொடர்ந்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி மீளவும் தெற்கு கடற்பரப்பை எஞ்சிய நடவடிக்கைகளுக்காக சல்லடை போட்டு அவதானிக்கலாயினர்.

இதன்போதே தெற்கு கரையிலிருந்து 850 கடல் மைல்களுக்கு அப்பால்  கடந்த 10 ஆம் திகதி இரவு  150 பெக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட ஹெரோயினுடன் 9 ஈரான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஈரான் நாட்டவர்களாக இருந்த போதும் தற்போது பாகிஸ்தானிலேயே வசித்து வருவதாக விசாரணையாளர்கள் தெரிவித்தனர். அதனால் அவர்களை பாகிஸ்தான் பிரஜைகளாக கருத முடியும் என அவர்கள் கூறினர்.

இந்நிலையில் இன்று (18) சந்தேக நபர்கள் , ஹெரோயின் தொகை, கடத்தல் மீன் பிடிப் படகுடன்  சுற்றி வளைப்பு அதிகாரிகளால் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.  இவ்வாறு எடுத்து வரப்பட்ட ஹெரோயின் தொகையின் பெறுமதி 170 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் 170 கிலோ 866 கிராம் நிறைக்கொண்ட ஹெரோயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் கூறினர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு பொலிஸ் அதிகாரியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை அன்டிஜன் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

அதன்படி மட்டு. பொலிஸ் அதிகாரிகளின் தகவல் மற்றும் கடற்படையுடன் இணைந்த நடவடிக்கையில்  கைப்பற்றப்பட்ட மொத்த ஹெரோயின் பெறுமதி 507 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிசார் கூறினர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு பொலிஸ் போதைப் பொருள்  ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்க்ப்பட்டுள்ளது.

போதைப் பொருள்  ஒழிப்பு பணியகத்தின்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜயசிங்கவின் மேற்பார்வையில் போதைப் பொருள்  ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் கீழ் சிறப்பு விசாரணைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38