(செய்திப்பிரிவு)

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் முதல் 5 வருட பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவிற்குவரும் நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கமானது 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் 12(1)(ஏ) சரத்தின் ஊடாக தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு கிஷாலி பின்ரோ ஜயவர்தனவின் பெயரைப் பரிந்துரை செய்திருக்கின்றது. 

தற்போது தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக செயற்பட்டுவரும் கிஷாலி பின்ரோ ஜயவர்தன, பதிப்பக நிறுவனங்கள், பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் ஏகோபித்த விருப்பத்தின்பேரில் நியமிக்கப்பட்டார் என்றும் இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், அதற்கான நியமனங்களை விரைவுபடுத்துவதன் ஊடாக தகவல் அறியும் உரிமையில் தாக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ளமுடியும் என்றும் ஜனாதிபதி, பாராளுமன்ற பேரவையின் தலைவரான சபாநாயகர் மற்றும் பாராளுமன்றப் பேரவையின் உறுப்பினர்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு கிஷாலி பின்ரோ ஜயவர்தனவின் கல்வி மற்றும் தொழில்சார் நிபுணத்துவம் தொடர்பான தகவல்களும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.