(எம்.மனோசித்ரா)

கொவிட் நிலைமையின் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறையிலுள்ள இந்த சந்தர்ப்பத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றமை பொறுத்தமான விடயமல்ல என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அடுத்து ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுபானசாலைகளை மாத்திரம் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்குமாயின் அது தற்போது முன்னெடுக்கப்பட வேண்டிய பொறுத்தமான செயற்பாடல்ல. சுகாதார அமைச்சினால் இது குறித்து எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சு மாத்திரமல்ல. வேறு யார் இதற்கு அனுமதி வழங்கினாலும் மக்கள் ஒன்று கூடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதன் மூலம் கொவிட் பரவலுக்கான வாய்ப்புக்களும் அதிகமுள்ளன.

எனவே உரிய அதிகாரிகள் இது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். இது போன்றதொரு நிலைமை மீண்டுமொரு முறை ஏற்பட வாய்ப்பளிக்கப்படக் கூடாது என்று தெரிவித்தார்.