எம்.எம்.சில்வெஸ்டர்அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை இலக்கு வைத்து, 23 கிரிக்கெட் வீரர்களை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அழைத்து செல்வதற்கு இலங்கை தயாராகவுள்ளது.

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் குழாமில் பெயரிடப்பட்ட 19 வீரர்களில் இரண்டு பேர் தற்போது உபாதைக்குள்ளாகியுள்ளனர்.


இந்நிலையில், தொடர்ச்சியாக வீரர்கள் உபாதைக்குள்ளாகும் பட்சத்தில், மேலதிக வீரர்களின்  தேவையேற்படும் என்பதால், மேலதிகமாக  5 வீரர்களை இணைத்துக்கொண்டு  23 வீரர்களை உள்ளடக்கியுள்ளது.


மேலதிகமாக கொண்டு செல்லும் மி‍னோத் பானுக்க, பெத்தும் நிஸ்ஸங்க, அஷேன் பண்டார், ரமேஷ் மெண்டிஸ், லக்சான் சந்தகேன் ஆகிய 5 வீரர்களுக்கான செலவை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்  நிறுவனம் ஏற்றுள்ளது.
உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ள குசல் பெரேராவின் பின்னங்காலில் உபாதை ஏற்பட்டுள்ளது.

இதற்காக இரண்டு வார காலம் ஓய்வில் இருக்கும்படி வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், அவருக்கு விளையாட முடியாது போனால், மினோத் பானுக்க அணியில் இடம்பிடிப்பார். எவ்வாறாயினும், உபாதைக்குள்ளான லஹிரு மதுஷங்கவுக்க பதிலாகவே மினோத் பானுக்க இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

ஓமானுக்கு எதிராக 7 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச இருபதுக்கு 20 போட்டித் தொடரில் குசல் பெரேரா விளையாடமாட்டார். இப்போட்டிகளில் கட்டாயமாக தினேஷ் சந்திமால் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.