எம்.எப்.எம்.பஸீர்

 வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, அதிவேக பாதையின் களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் மாயமான காசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில் வைத்து, பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.

கடந்த  செப்டம்பர் 11 ஆம் திகதி,களனிகம இடைமாறல் அலுவலகத்தின் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 500 ரூபாவுடன்  குறித்த பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர்  மாயமாகியுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும்,  திருடப்பட்ட பணத்தில் 3 இலட்சத்து 84 ஆயிரம் ரூபா இதுவரை  மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், குறித்த காசாளர் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் சிறிது சிறிதாக பெட்டகத்திலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்கு பொறுப்பாக செயற்பட்ட பொலிஸ்  அதிகாரி ஒருவரின் தகவல்கள் பிரகாரம், கைது செய்யும் போது சந்தேக நபரிடம் 5 ஆயிரம் ரூபா மட்டுமே இருந்ததாக கூறினார். 

திருடிய பணத்தில் 5 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் தனது தனிப்பட்ட கடன்களை மீள செலுத்த பயன்படுத்தியுள்ளதாகவும், அவ்வாறு கடன் மீள செலுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இரு  வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும் அடங்குவதாகவும்  அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில், உள்ளக ஆய்வின் போது, காசாளர்களின் பெட்டகத்திலிருந்தும், அன்றாட வருமானத்தை வைக்கும் பெட்டகத்திலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே பண்டாரகம பொலிசாரும் பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவினரும் சந்தேக நபரைக் கைது செய்ய விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.