நா.தனுஜா

ஐக்கிய  மக்கள்  சக்தியினால் சிங்கள மொழியில்  'பலவேகய'  என்ற பெயரிலும் தமிழ்மொழியில் 'ஐக்கிய குரல்' என்ற பெயரிலும் அச்சிடப்படவுள்ள பத்திரிகையின் முதற்பிரதியை வெளியிடும் நிகழ்வு இன்று சனிக்கிழமை கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இணையவழியில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோரின் தலைமையிலேயே இந்தப் பத்திரிகையை வடிவமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொவிட் - 19 வைரஸ் பரவல் நெருக்கடியின் காரணமாகத் தற்போது இப்பத்திரிகையை மின்னிதழ் வடிவில் வெளியிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் பத்திரிகையாக அச்சடிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் மேற்படி பத்திரிகையின் முதற்பிரதியை வெளியிடும் இணையவழி நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியதாவது,

 

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற மக்களை முன்னிறுத்திய பயணத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நகர்வொன்று இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அந்த நகர்விற்கான தொடக்கப்புள்ளியை இட்ட இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு இவ்வேளையில் நன்றி கூறவிரும்புகின்றேன்.

அவருடைய அரசியல் வரலாற்றை எடுத்துநோக்குகையில் வீடமைப்புத் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் முன்நின்று செயற்பட்டார்.

அதேபோன்று தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் 'பலவேகய' மற்றும் 'ஐக்கிய குரல்' ஆகிய பத்திரிகைகளை வடிவமைப்பதிலும் அவரது சிறப்பானதும் அர்ப்பணிப்பானதுமான தலைமைத்துவத்தினை வழங்கியிருக்கின்றார்.

 பகுத்தறிவை மையப்படுத்திய ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அதற்கு இப்பத்திரிகை முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்புகின்றோம் என்றும்  தெரிவித்தார்.