செப்டம்பர் 22, 1930 இல் ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் பிறந்தார்  பிரதிவாதி பனீங்கர ஸ்ரீநிவாஸ். இவர் பின்னாளில் பி. பி. ஸ்ரீநிவாஸ் என்ற பெயரால் அழைக்கப்பட்டார். 

 

பி.பி.எஸ்.பிரதிவாதி,சேஷகிரியம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாயார் மிகுந்த இசையார்வம் கொண்டவர் எனவே பிபிஎஸ்ஸுக்கும் இசைமீது வேட்கை அதிகமானது.

சென்னை சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றிருந்தாலும் பின்னணி பாடகராக வர வேண்டும் என்ற இவரது தணியாத தாகம் தொடர்ந்தது.அக்காலத்தில் பிரபலமாக விளங்கிய இவரது மாமனாரான கிருஷ்ணஸ்வாமியின் நாடகங்களில் பின்னணி பாடி தன் இசை வாழ்வை ஆரம்பித்தார்.இவர் பிரபல ஹிந்திப் பாடகர் மொகம்மத் ராஃபியை தனது துரோணராகக் கொண்டு அவர் பாடிய பாடல்களை பாடி சினிமாவில் வாய்ப்பு தேடினார்.

அதன் பலனாக,ஜெமினி ஸ்டூடியோ இவரின் எதிர்காலத்திற்கு ஒளிவிளக்கேற்றியது.இவரின் குரலைக் கேட்ட ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது தான் தயாரித்து கொண்டிருந்த ஹிந்தி படமான "மிஸ்டர் சம்பத்" தில் இவரை அறிமுகம் செய்து வாய்ப்பு வழங்கினார்.ஹிந்தி திரையுலகின் பிரபல பின்னணி பாடகி கீதா தத்துடன் இணைந்து இவர் பாடிய "கனஹிபரது"என்ற முதல் பாடல் மிகவும் பிரபலமானது.

பின் தமிழில் "ஜாதகம்" படத்தில் "சிந்தனை என் செல்வமே"என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் கன்னட சுப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்காக "பக்த கனகதாஸா"என்ற பக்திப்படத்தில் மனமுருகி இவர் பாடிய பாடல் பட்டி தொட்டி எல்லாம் சென்று புகழடையவே இருவர் கூட்டணியும்  பல ஆண்டுகளாக கன்னட திரையை கோலோச்சியது.தமிழ் நாட்டில் சிவாஜிக்கு எப்படி சௌந்தரராஜனோ அது போல் கன்னட திரையுலகில் ராஜ்குமார் மற்றும் பிபிஎஸ் இணை வெற்றிக்கூட்டணி.

அதுவரை ஜெமினி கணேசனுக்கு பின்னணி பாடிய ஏ.எம்.ராஜா வெற்றி ஜோடி,பிபிஎஸ்ஸின் வரவிற்கு பின் நீண்ட வருடங்கள் இணைந்து பல அருமையான பாடல்களை வழங்கியது.

பாலாஜி,முத்துராமன் குரலுக்கும் இவர் குரல் வெகுவாக ஒத்துப்போனது.அவர்களின் பல படங்களில் பிபிஎஸ் பின்னணி பாடினார்.  தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி உட்பட 8  இந்திய மொழிகளில் எழுத,பேச,கவிதை புனையும் வல்லமை பெற்றவர்.ஆங்கிலம்,உருது  உட்பட 12 மொழிகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப்பாடியுள்ளார்.

பல மொழிகளில்  பாடல்களையும் எழுதியுள்ளார். "மதுவண்டு" என்ற புனைப்பெயரில் தமிழ்க் கவிதைகளை எழுதியுள்ளார். வறுமையின் நிறம் சிவப்பு, நண்டு ஆகிய திரைப்படங்களில் வரும் ஹிந்திப்பாடல்களை இவரே இயற்றினார்.தமிழ்த் திரையிசை உலகில் டி. எம். சௌந்தரராஜன் புகழுச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். உச்சஸ்தாயியில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரல் கொண்டு இனிமையைக் கூட்டி, பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டு வந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள். 

இவர் பெற்ற விருதுகள்:

கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது மிக உயர்ந்த விருது, மாநில முதல்வர் வழங்கிய மதிப்புமிக்க கன்னட "ராஜ்யோத்சவ" விருது 

தமிழக மாநிலத்தின் கௌரவ "கலைமாமணி" விருது. 

கன்னட சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர் வழங்கிய "டாக்டர் ராஜ்குமார் ஹர்தா" விருது. 

மதிப்புமிக்க "கர்நாடக நாடோஜா" விருது  கன்னட பல்கலைக்கழகம் , ஹம்பி , கர்நாடக ஆளுநரால் கர்நாடகா வழங்கியது. 

தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது - 2002 இல் கலைவாணர் விருது. 

ஒரு சமயம் சென்னையில் ஒரு கல்லூரியில் நடந்த  பாட்டுப்போட்டிக்கு பி.பி.ஸ்ரீநிவாஸும்,இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் தலைமை வகித்தனர். அப்போது "ராமு" திரைப்படத்தில் இடம்பெற்ற "நிலவே என்னிடம் நெருங்காதே"என்ற  பிபிஎஸ் பாடிய பாடலை ஓரு சிறுவன் அழகாகப் பாடி இவர்களின் பாராட்டைப் பெற்றான்.

  அச்சிறுவனே பின்னாளில் அகிலமே போற்றும்"பாடும்நிலவு" எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆனான்.எஸ்பிபியின் இசையுலக வாழ்விற்கு அச்சாரமிட்டது பாடல் திலகம் பிபிஎஸ்ஸின் குரலே.இவர் பாடிய பாடல்கள் சில, காலங்களில் அவள் வசந்தம்,நிலவே என்னிடம் நெருங்காதே,

மயக்கம் கலக்கமா,அருகில் வந்தாள்,பால் வண்ணம் பருவம் கண்டேன்,பொன் என்பேன் ஒரு பூவென்பேன்,"சௌந்தரராஜனுடன் இணைந்து"  பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை,தோல்வி நிலையென  நினைத்தால்,பூஜைக்கு வந்த மலரே வா,நினப்பதெல்லாம் நடந்து விட்டால்,நாளாம் நாளாம் திருநாளாம்,மிதிலாந்நகரில் தமிழ்ச் சங்கம்,அவள் பறந்து போனாளே,இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை, பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன சொல்லடி ராதா ராதா,ஒரு துன்பமில்லை,ஆதி மனிதன் காதலுக்குப்பின்,  "சௌந்தரராஜனுடன் இணைந்து"  கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு,காதல் நிலவே கண்மணி ராதா,தாமரைக் கன்னங்கள் தேன் மலர், "சௌந்தரராஜனுடன் இணைந்து" உலகின் முதலிசை தமிழிசையே  என அடுக்கிக் கொண்டே போகலாம்.கடைசி காலத்தில் இவரின் குரலைப் பயன்படுத்தியவர் என்ற பெருமையும் பெற்றவர் இயக்குனர் செல்வராகவனே...!

"இது என்ன மாற்றம்"என்ற பாடலை 7ஜி ரெயின்போ காலணி படத்திலும்,"பெம்மானே பேருலகின் பெருமானே" என்ற பாடலை ஆயிரத்தில் ஒருவனிலும்  பாடிட வாய்ப்பளித்தார். இவர் பாடிய கடைசி பாடலும் இதுவே.தான் வசீகரம் நிறைந்த இனிய சாரீரத்தால் ரசிகர்களின் உள்ளங்களில் குடி கொண்டிருந்த பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் 2013.04.14 சென்னையில் ஓர் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று இதயவலியால் தனது  82 ஆம் அகவையில் இறைவனடி சேர்ந்தார்.

PBS  என்ற சொல்லை PLAY BACK SINGER  என்றால் இவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். காலங்களில் அவள் வசந்தம்,பாடல் கலைகளில் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலம் ரசிகர்களுக்கு என்றும் "வசந்தகாலமே" 

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை