(எம்.எப்.எம்.பஸீர்)

இணைய வழியே கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும், அச்செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களை  அச்சுறுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றமை மற்றும் அச்சுறுத்தல் விடுக்கின்றமை தண்டனைக்குரிய குற்றம் என்பதால், அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும்  நபர்களுக்கு எதிராக விசேட கவனம் செலுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் எவரேனும் கற்பித்தல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அச்சுறுத்தல்  விடுக்கும் பட்சத்தில் அது குறித்து முறைப்பாடு செய்யுமாறு இணைய வழி ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களை பொலிஸ் தலைமையகம் கோரியுள்ளது.

அதனடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, 119 எனும் அவசர அழைப்பு தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.