(எம்.மனோசித்ரா)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை.

போலியான மின்னஞ்சல் ஊடாகவே விமான நிலையங்களில் பாதுகாப்பு தொடர்பில் போலி தகவல் பகிரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த வாரம் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்னஞ்சல் ஊடாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் தெளிவுபடுத்தி இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியான தகவல் போலியான மின்னஞ்சல் ஊடாக பகிரப்பட்ட போலி தகவலாகும்.

விமான நிலையங்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் இது குறித்து வீண் அச்சமடையத் தேவையில்லை.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்குகள் முறையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பாதுகாப்பு சார் துறைகள் செயற்படுகின்றன. நாட்டின் அமைதியை சீர் குழைக்க எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது.

தனியார் வைத்தியசாலையொன்றில் கைகுண்டுகள் மீட்க்கப்பட்டமை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உள்நாட்டவர்களாவர். அவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.