(எம்.எப்.எம்.பஸீர்)

தடயவியல் கணக்காய்வு தொடர்பில் மத்திய வங்கியின் பிரதான அதிகாரியாக செயற்பட்டவரும், பிணை முறி மோசடி விவகார குற்றவியல் விசாரணைகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட்டவருமான  கே.எம்.ஏ.என். தவுலக, உடன் அமுலுக்கு வரும் வகையில்  மத்திய வங்கியின் நிதிச் சபை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

16 ஆவது மத்திய வங்கி ஆளுநராக, அஜித் நிவாட் கப்ரால்  பதவியேற்று 48 மணி நேரத்துக்குள் அவர் இவ்வாறு குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு  விசாரணைகளின் பிரகாரம் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்ரன் மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ( 2005 - 2015) ஆகியோருடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் கே.எம்.ஏ.என். தவுலகலவின் பொறுப்பிலேயே இருந்து வந்தது.

இவ்வாறான நிலையிலேயே, அவர் நிதிச் சபையின் செயலர் பதவிலிருந்து மாற்றப்பட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றவியல் விசாரணை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்துடனும் இணைந்து செயற்பட்டவர் தவுலகல என்பதுடன், அவரின்  நீக்கமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.